கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என விமர்சித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை காப்பவர்கள் தாங்களே பாதுகாப்பின்றி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியின் திறமையின்மையை காட்டுகிறது.
கோவைக்கு பெரிய திட்டங்களை கொண்டுவர முடியாமல் திமுக அரசு காலத்தை வீணாக்கி வருகிறது. மக்களின் நலன், தொழில் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளாத ஆட்சியாகவே திமுக மாறியுள்ளது.
முக்கியமாக போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய திமுக அரசு அதிலும் தோல்வியடைந்துள்ளது. மின்சார கட்டண உயர்வு மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. தொழில் துறையினர் கூட அதனால் பாதிக்கப்பட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.