அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வாக்குத் திருட்டு மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இரவு 8.45 மணியளவில் கூட்டம் நடைபெற அனுமதிக்கப்பட்ட இடத்தில் தனது வாகனத்தின் மீது நின்று உரையாற்றிய விஜய், தாமதமாக வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
அவர் பேசும்போது, “பாஜக துரோகம் செய்கிறது என்கிறார்கள்; ஆனால் திமுக அரசு நம்பவைத்து ஏமாற்றுகிறது. நாமெல்லாம் ஒன்றாக நம்பி இவர்களைத் தேர்ந்தெடுத்தோம். 505 வாக்குறுதிகளை அளித்தும், எத்தனையைக் காப்பாற்றியிருக்கிறார்கள்? பெரும்பாலானவற்றை நிறைவேற்றாமல், அனைத்தும் நிறைவேறிவிட்டதாகக் கூறுகிறார்கள். மனசாட்சி எதுவும் இல்லாமல் கதைகள் சொல்கிறார்கள்.
ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என்று சொன்னவர்கள் இன்று ரீல்ஸில்தான் வாழ்கிறார்கள். இதற்கு பெயர் நம்பிக்கை மோசடி. மக்களை ஏமாற்றுவதில் திமுகவும் பாஜகவும் ஒரே வகை,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அனைத்து தரப்பினரையும் சார்ந்த பிரச்சினைகளுக்காக திமுக வெளியிட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை என்றும், பாஜகவுடன் திமுக மறைமுக உறவு வைத்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் விஜய் வலியுறுத்தினார்.