விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்று உரையாற்றினார்.
அதில், "உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பாக பாஜக திகழ்கிறது. 14 கோடி உறுப்பினர்களைக் கொண்டிருப்பது இதற்கான சான்று. தற்போது நாட்டில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அதில் 13 மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி அமைத்துள்ளது. மக்களவையில் 240 எம்.பி.க்கள், மாநில சட்டப்பேரவைகளில் சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள், மேலும் 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்களுடன் பாஜக இந்தியாவின் மிகப்பெரிய பிரதிநிதித்துவக் கட்சியாக விளங்குகிறது.
பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 11 ஆண்டுகளில் திறம்பட்ட, பொறுப்பான ஆட்சி நிலவுகிறது. இதனால் இந்தியா முன்னேற்றப் பாதையில் வேகமாக செல்கிறது. ஆனால், முந்தைய அரசுகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன், வளர்ச்சித் திட்டங்களையும் புறக்கணித்தன. குடும்ப ஆதிக்கம், ஊழல், சோம்பேறித்தனமே அவற்றின் அடையாளமாக இருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஆந்திரப் பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.