தக்காளி விலை கடும் வீழ்ச்சி... சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள்!
Dinamaalai September 15, 2025 08:48 PM

விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தென்காசியில் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. அறுவடை செய்த தக்காளிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், தக்காளிகளை சாலையோரம் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், அச்சன்புதூர், இலத்தூர், பாவூர்சத்திரம், சிவராம்பேட்டை, சீவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

பெரும்பாலான இடங்களில் தக்காளி அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. அறுவடை செய்த தக்காளிகளை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மார்க்கெட்டுகளுக்கு வழக்கத்தைவிட வரத்து அதிகமானதால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் வீழ்ச்சி அடைந்தது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.10 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தக்காளியை பறிப்பதற்கான கூலியை கூட கொடுக்க முடியாமல் அப்படியே விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்த தக்காளிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வீரகேரளம்புதூர் அருகே சாலை ஓரங்களில் ஆங்காங்கே தக்காளி குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. அதேபோல் பல்லாரி 15 ரூபாய்க்கும், உள்ளி 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து வீரகேரளம்புதூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘இடுபொருட்களும் விலை உயர்ந்துவிட்டதால், இனிமேல் எங்களால் விவசாயமே செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்து மதிப்புக்கூட்ட பொருளாக மாற்றி விற்க வேண்டும்.

விவசாய பொருட்களை பாதுகாக்க வீரகேரளம்புதூர் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் குடோன்கள் அமைத்து தரவேண்டும். மேலும் தக்காளியை பேஸ்ட் போன்று தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.