அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்
Webdunia Tamil September 16, 2025 05:48 AM

அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் விஜய் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:

"விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அண்ணா அல்லது எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் வாக்குகள் அவருக்குச் செல்லாது. அ.தி.மு.க.வின் வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது. அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

முதல்வர் ஸ்டாலினை விஜய் "அங்கிள்" மற்றும் "சி.எம். சார்" என்று அழைத்தது குறித்து, "என்னிடம் கேட்டிருந்தால், 'சி.எம். சாத்தான் சார்' என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை 'மை டியர் குட்டிச் சாத்தான்' என்றும் சொல்லி இருக்கலாம்" என்று கிண்டலாகக் கூறினார்.

அமைச்சர் கே.என். நேரு மீது குற்றம் சாட்டிய ஜெயக்குமார், "மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார்" என்றார்.

மேலும், தி.மு.க. ஆட்சியை "சாத்தான் ஆட்சி" என்று விமர்சித்த அவர், "இந்த ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கிறது" என்றும் கூறினார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.