Fruits In Pregnancy: கர்ப்ப காலத்தில் ஏன் இந்த 8 பழங்களை தவிர்க்கக்கூடாது..? பிரபல மருத்துவர் விளக்கம்!
TV9 Tamil News September 17, 2025 01:48 AM

கர்ப்ப காலத்தில் (Pregnancy) ஆரோக்கியமான மற்றும் சத்துள்ள உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். சரியான ஊட்டச்சத்துக்கள் கரு வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சிறிது உணவை எடுத்துக்கொண்டாலே பசி அடங்கிவிடும். இதை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே பசி எடுக்க தொடங்கும். இந்த நேரத்தில், வைட்டமின் உட்கொள்ளலை அதிகரிக்கவும், பசியை கட்டுப்படுத்தவும் அவ்வபோது பழங்களை சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும். மாதுளை, வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் ஏ (Vitamin A) மற்றும் சி, பொட்டாசியம், நார்ச்சத்துகள் கிடைக்கும். அந்தவகையில், கர்ப்ப காலத்தில் சாப்பிட தவிர்க்கக்கூடாத 8 பழங்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்-மகளிர் மருத்துவ நிபுணர் சவிதா அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

என்னென்ன பழங்களை சாப்பிடுவது நல்லது..? இதன் பயன்கள் என்ன..?

View this post on Instagram

A post shared by Dr Savitha Ashok (@dr.savitharajalakshmi)

மாதுளை:

கர்ப்ப காலத்தில் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மாதுளை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது தாயின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கருவின் நம்பியல் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், இது ஆரோக்கியமான கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ALSO READ: கர்ப்ப காலத்தில் மொத்தம் எத்தனை ஸ்கேன்? ஏன் எடுக்கப்படுகிறது..? மருத்துவர் சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!

கொய்யா:

கொய்யாவில் வைட்டமின் ஈ, சி மற்றும் பி நிறைந்துள்ளன. இது கர்ப்ப காலத்தில் தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கொய்யாவில் நல்ல அளவு தண்ணீர் உள்ளது, இது நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. கொய்யாவில் நல்ல அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது, இது இரும்புச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளன. இது கர்ப்பிணி பெண்ணுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்தை தரும். முதல் மூன்று மாதங்களில் வாழைப்பழங்களை சாப்பிடுவது குமட்டல் மற்றும் காலை சுகவீனத்தைக் குறைக்க உதவும், ஏனெனில் அவை லேசான சர்க்கரை மற்றும் இனிமையான அமைப்பைக் கொண்டுள்ளன.

ஆரஞ்சு – சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் போலேட் அதிகமாக உள்ளன. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுப்பதற்கு ஃபோலேட் மிகவும் முக்கியமானது. இதில் அதிக நீர் உள்ளடக்கமும் உள்ளது. இது நீரேற்றத்திற்கு உதவும்.

அவகேடோ:

அவகேடோ பழங்களில் ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் போலிக் ஆசிட் உள்ளன. இது வளரும் குழந்தையின் தோல் மற்றும் மூளை திசுக்களை உருவாக்கும் செல்களை அதிகரிக்கின்றன. அவகேடாவில் உள்ள பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசை பிடிப்புகளை போக்க உதவும்.

ஆப்பிள்:

ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் என வளரும் கருவுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இது தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

கிவி பழங்கள்:

கிவியில் வைட்டமின் சி மற்றும் போலி ஆசிட் நிறைந்துள்ளது. இது தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கருவின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த பழம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது.

ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..? மருத்துவர் கூறும் அட்வைஸ்!

தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்:

தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் மெக்னீசியம் கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் குமட்டல் உணரும்போது புத்துணர்ச்சியூட்டும், நீரேற்றத்திற்கு உதவும். மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் வீக்கம் போன்ற நீரிழப்பு பிரச்சனையை சரிசெய்யும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.