மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் போலீசார், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையத்தில் நின்ற மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயிலில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்தக் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் 3 பேரை மடக்கிப் பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், ஜீவா மற்றும் சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அரிநாத் உள்ளிட்ட மூன்று பேர் புனேவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் போதை மாத்திரைகள் கடத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.