குடும்பத் தகராறில் கணவனை விட்டு பிரிந்து தனியாக இருந்த மனைவியை கணவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணவரின் நண்பர் கைது செய்யப்பட்டார்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வரதராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் கௌரி. இவர் தனது ஊரான வரதராஜபுரம் அருகே உள்ள தனியார் செங்கல் காளவாசலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு உடன் வேலை செய்து வந்த சரவணகுமார் என்பவரிடம் காதல் ஏற்பட்டு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு கணவர் சரவணகுமார் உடன் அவரது ஊரான டி. புதூரில் கௌரி குடும்பம் நடத்தி வந்தநிலையில், கௌரிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து கோபித்துக் கொண்டு தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு கெளரி சென்று விட்டார்.
இதையடுத்து தனது கணவரின் நண்பரான அஜித்குமார் என்பவரிடம் தொடர்பு கொண்டு கணவர் குறித்து கேட்டபோது, அஜித்குமார் ஆண்டிபட்டிக்கு வந்தால் கணவரிடம் பேசி சேர்த்து வைப்பதாக கூறியதையடுத்து கௌரி ஆண்டிப்பட்டிக்கு தனியாக வந்துள்ளார். ஆண்டிபட்டிக்கு வந்த கெளரியை அஜித்குமார் ஏமாற்றிபேசி ஆண்டிப்பட்டியில் இருந்து ஆசாரிப்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். விடுதியின் அறைக்குச் சென்றவுடன் கதவை அடைத்துக்கொண்டு, அஜித்குமார் தனது உடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக நின்று கொண்டு கௌரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு கௌரி உடன்பட மறுக்கவே அவரது உடைகளை கிழித்து பலாத்காரம் செய்ய முற்பட்ட நிலையில் அங்கிருந்து கதவுகளை தட்டி திறந்து தப்பி தனது கணவரிடம் சென்று நடந்தது பற்றி கௌரி கூறியுள்ளார்.
இதையடுத்து கௌரி மற்றும் அவரது கணவர் சரவணகுமார் ஆகியோர் ராஜதானி காவல் நிலையத்தில் அஜித்குமார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமுறைவாக இருந்த அஜித் குமாரை கைது செய்தனர். குடும்பத்தகராறிரில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனியாக பிரிந்து சென்ற இளம்பெண்ணை கணவருடன் சேர்த்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறி கணவரின் நண்பர் தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.