சென்னையில் இன்று ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டியின் வீட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணன் ரெட்டி ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்.
அதேபோல், புரசைவாக்கத்தில் மொத்த தங்க நகை வியாபாரியான மோகன்லால் காத்ரிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சௌகார்பேட்டை பகுதியில் இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரின் இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுவதால், இது ஒரே வழக்கின் அடிப்படையிலா அல்லது வெவ்வேறு வழக்குகளுக்காக நடத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
இந்த அதிரடி சோதனைகள் சென்னை நகை வணிக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Mahendran