கமல்காசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21-ந் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது. அதன் படி இன்று காலையில் சென்னை மற்றும் மாலையில் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதையடுத்து நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுதினம் காலை நெல்லை, மாலை திருச்சி மற்றும் 21-ந் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.
இந்த ஆலோசனையின் போது ‘மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது?, கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?, வர உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளை கேட்கலாம்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.