“இபிஎஸ் சொன்னது சரித்திர உண்மை”… அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான்… அண்ணாமலை சுளீர்..!
SeithiSolai Tamil September 19, 2025 03:48 AM

பாஜக மூத்த தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்ததையடுத்து, முகத்தை மூடியபடி காரில் சென்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கும், அதனுடன் தொடர்புடைய அரசியல் ஊகங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி தில்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் பின்னர், அவர் காரில் தங்கி இருந்த ஒட்டலுக்கு புறப்பட்டார். அந்த நேரத்தில், தனது முகத்தை கைக்குட்டையால் துடைத்தபோது எடுத்த வீடியோ ஒன்று பரவலாக பகிரப்பட்டு, “முகம் மூடியபடி சென்றார்” என சமூக வலைதளங்களில் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது.

இதற்கான விளக்கமாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “அமித் ஷா வீட்டிலிருந்து காரில் வெளியே வரும்போது, என் முகத்தை கைக்குட்டையால் துடைத்தேன். அதைத் தவறாக விளக்கி அரசியல் செய்கிறார்கள். ஒரு முதலமைச்சர் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் விமர்சிக்கிறார். அவருக்கு இது அழகல்ல. முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு எள்முனை அளவுகூட இல்லை. முகம் துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது?” எனக் கடும் பதிலடி அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சந்தித்தார். அவர் முகத்தை மூடவில்லை என்பது உண்மை. மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை பாதுகாப்பதில் பாஜகவும் முக்கிய பங்கு வகித்தது என அவர் கூறியிருப்பது சரித்திர உண்மை, அந்த கருத்தை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.