உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள்; டி.வி வழங்கிய ஆற்காடு சாரதி - நெகிழும் ராணியின் குடும்பம்!
Vikatan September 19, 2025 09:48 PM

டந்த 14-9-2025 ஜூ.வி இதழில், “எங்க நாலு பேரையும், கருணைக்கொலை பண்ணிடுங்க...” ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய தாய்... நெஞ்சையறுக்கும் ஒரு குடும்பத்தின் சோகம்! - என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்!

வேலூர் மாவட்டம், வடவிரிஞ்சிபுரம் கொட்டாற்றின் கரையோரமாக, கதவு இல்லாத தகர ஷீட் வீட்டில் மூன்று மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைத் தனியொரு ஆளாக அரவணைத்தபடி, வறுமையோடு போராடிக் கொண்டிருந்த ராணியின் துயரம் பற்றி அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தோம். எழுந்து நடக்கக்கூட முடியாத, மன வளர்ச்சி இல்லாத, உடல் நடுக்க நோயும் சேர்ந்து வாட்டி வதைக்கும் மூன்று பிள்ளைகளோடு, அவர் படும் கஷ்டத்தைக் குறிப்பிட்டிருந்தோம்.

மகிழ்ச்சியில் ராணியின் குடும்பம்

இதழ் வெளியான செப்டம்பர் 10-ம் தேதி அன்றே, அரசுத் தரப்பிலிருந்து உடனடியாக உதவி கிடைத்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, ராணியின் குடும்பம் பாதுகாப்பாக வசிப்பதற்காக வடவிரிஞ்சிபுரம் குடியிருப்புப் பகுதியில், 620 சதுர அடி இடத்துக்கான இலவச வீட்டுமனைப் பட்டாவை நேரில் வழங்கினார். அந்த மனையில், `கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் ரூ.3.5 லட்சத்தில் புதிய கான்கிரீட் வீடு கட்டித்தருவதற்கான அனுமதி ஆணையையும் வழங்கி, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விரைவாகக் கட்டிக்கொடுக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகன் சுதிலுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலி, இரு மாற்றுத்திறனாளி மகள்களுக்கும் தலா ரூ.15,750 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும் வழங்கினார் ஆட்சியர் சுப்புலெட்சுமி. மூன்று பிள்ளைகளும் ஏற்கெனவே தலா 2,000 ரூபாய் உதவித்தொகை பெறும் நிலையில், பராமரிப்பு உதவித்தொகையாகக் கூடுதலாக தலா 1,000 ரூபாய் வழங்கவும் ஏற்பாடு செய்து, தாய்மை உணர்வோடு செயல்பட்டிருக்கிறார் ஆட்சியர் சுப்புலெட்சுமி.

ஆற்காடு ஏ.வி.சாரதி

ஆட்சியரின் உடனடி நடவடிக்கை நெகிழ்ச்சியடைய வைத்திருப்பதைப்போல, ராணியின் வலி உணர்ந்து, அவரின் துயர் துடைக்க முன்வந்திருக்கிறார்கள் ஜூ.வி வாசகர்களும். இதழ் வெளியான நாளில் இருந்து நேற்று வரை, தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் வசிக்கும் ஜூ.வி வாசகர்கள் பலரும் ராணியின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2.35 லட்சம் பணத்தை அனுப்பி பேருதவி செய்திருக்கின்றனர். மூன்று மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் வீட்டிலேயே இருப்பதால், அவர்களின் பொழுதுபோக்கிற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி டி.வி-யையும் வாங்கி கொடுத்திருக்கிறார் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளரும் பிரபல தொழிலதிபருமான `ஆற்காடு’ ஏ.வி.சாரதி. இப்போது, பெருமூச்சுவிட்டு, மன நிம்மதியடைந்திருக்கிறது ராணியின் குடும்பம்.

`உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கண்ணீரோடு நெகிழ்கிறார் ராணி!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.