அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 2 ஆண்கள் அறிமுகமாகி இருவரும் தொடர்ந்து நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் டியூசன் வகுப்பிற்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் டியூசன் ஆசிரியரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மாணவி வகுப்பிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவி சுமார் 8 மணிக்கு அழுதபடி வீடு திரும்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான 2 பேர், தன்னை டியூசன் வகுப்பிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.