என்னை சர்வதேச கைக்கூலி என்று ஒருவர் பேசியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது என KPY பாலா வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலா வெளிநாட்டு கைக்கூலி, அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் போலியானவை என யூடியூப்பில் ஒருவர் கூறியது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலா சர்வதேச கைகூலியா? எவ்வளவு வன்மம்ல. ஒரே ஒரு படம் பண்ணேன். இதுக்கு அப்பறம் இப்படியெல்லாம் பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல. என்னை சர்வதேச கைக்கூலி என்று ஒருவர் பேசியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. பாலா சர்வதேச கைக்கூலி... ஸ்கேம்னு சொல்றாங்க. ஆனால் நான் தினக்கூலி. நான் வாங்கி தரும் வாகனங்களை, அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள், அதனால் நம்பரை மறைத்து கொடுக்கிறேன். எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் தான் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன்.
ஆம்புலன்ஸின் நம்பர் பிளேட்டில் ஒரு எழுத்து தவறாக இருந்ததை அறிந்தவுடன் உடனடியாக மாற்றி வேறு ஆம்புலன்ஸ் வழங்கிவிட்டேன். ஆம்புலன்ஸ் மூலம் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. ஆனால் அந்த நல்ல விஷயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. எனது சொந்த உழைப்பில்தான் கார் வாங்கினேன். பல பேர் சொல்வது போல அது போலியான எண் கொண்டது அல்ல. அடுக்குமாடி வீடு அல்லது ஆடம்பர கார் வாங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதே இடத்தில் சிறிய கிளினிக் கட்ட முடிவெடுத்துள்ளேன். மக்கள் எனக்கு துணையாக நிற்கும்வரை தொடர்ந்து சேவை செய்வேன்.” எனக் கூறியுள்ளார்.