பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (47) தனது பள்ளிக்கால ஆசிரியை பிரிஜிட் (72) என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கிடையிலான வயது வித்தியாசம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதைவிட அதிகமான சர்ச்சையை உருவாக்கியது, அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் பற்றி பரவிய வதந்தி தான்.
பிரிஜிட் மேக்ரான் ஒரு காலத்தில் ஆணாக இருந்தவர் என்றும், பிறகு பாலின மாற்ற அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார் என்றும் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. 2017ம் ஆண்டு, நடாஷா ரே என்ற பெண் யூடியூபில் வெளியிட்ட வீடியோவில், பிரிஜிட் உண்மையில் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்பவரே என்றும், அவர் தனது சகோதரனாக கூறப்படும் நபர் இவர் தான் என ஒப்பீட்டு புகைப்படங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அவதூறு காரணமாக நடாஷாவுக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பின்னர் சில தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது இந்த சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியவர் அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ். இவர், “பிரிஜிட் மேக்ரான் ஒரு ஆணே” என கூறி மேக்ரான் தம்பதிகளை மக்கள் முன்னிலையில் கேள்விக்குள்ளாக்கினார்.
இதற்குப் பதிலாக, இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட், அமெரிக்க நீதிமன்றத்தில் கேண்டஸ் ஓவன்ஸுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கின் ஒரு முக்கியமான பகுதியாக, பிரிஜிட் கர்ப்பமாக இருந்தபோதைய புகைப்படங்கள், மருத்துவ பதிவுகள் உள்ளிட்ட அறிவியல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக வழக்கறிஞர் டாம் கிளேர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், பிரான்ஸ் அதிபரின் குடும்ப வாழ்க்கையை மூலதனமாக்கி அரசியல் பிரசாரம் செய்யும் முயற்சிகள் பல தரப்பிலும் கண்டனம் எழுப்பி வருகின்றன. உண்மையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் விடை அளிக்கப்படும் என மேக்ரான் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.