கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய படம் ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கியும், கதாநாயகனாகவும் நடித்த இந்த குறைந்த பட்ஜெட் படமே வசூலில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தி, ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இப்போது ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது.
இதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ₹33 கோடிக்கு தியேட்டர் உரிமம் விற்றதாக தகவல்கள் வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை 30 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ரசிகர்களை காத்திருக்கும் டிரெய்லர் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட, இந்தியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிட உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இதற்கு முன்னதாக ‘காந்தாரா’, ‘கே.ஜி.எப் 2’, ‘சலார்’ போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கிய ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்த ‘காந்தாரா சாப்டர் 1’-ஐ தயாரித்திருப்பது ரசிகர்களின் ஆவலை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.