"மோதியாக இருந்தால் இப்படி செய்வீர்களா?"; கேள்வி எழுப்பும் விஜய் - திமுக எதிர்ப்பு மட்டுமே தவெகவின் அரசியலா?
BBC Tamil September 21, 2025 10:48 PM
TVK

தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 20) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

நாகப்பட்டினத்தில் பேசிய போது ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்த விஜய், 'எனது பரப்புரைக்கு விதிக்கும் நிபந்தனைகளை பிரதமர் மோதி அல்லது அமித் ஷாவுக்கு விதிக்க முடியுமா?' என கேள்வி எழுப்பினார்.

அதன் பிறகு, திருவாரூரில் பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு, "ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என மார்தட்டிக்கொண்டவரின் மகன், முதல்வர் ஸ்டாலின், நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்னும் தேரை கட்டைபோட்டு ஓடவிடாமல் நிறுத்தியுள்ளார்" என்று கூறினார் விஜய்.

திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், "திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று 'தவெக' தான்" என நிறுவ விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே சமயம், பெரிய அளவில் வாக்குகளைப் பெற 'திமுக எதிர்ப்பு' என்பதைக் கடந்து விஜய் யோசிக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

விஜய் பேசியது என்ன? TVK நாகப்பட்டினத்தில் பேசிய போது 'தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக' விஜய் குற்றம்சாட்டினார்.

தவெக தலைவர் விஜய், இன்று (செப்டம்பர் 20) தனது பரப்புரையின் முதல்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் அண்ணா சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார். அப்போது தனது சுற்றுப்பயணங்கள் ஏன் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் வழங்கினார்.

"தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். ஆனால், இங்கே மீன் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அதிக குடிசை உள்ள பகுதியும் நாகப்பட்டினமே." என்று பேசினார்.

"சனிக்கிழமை மட்டுமே ஏன் மக்களை சந்திக்கிறீர்கள் என்கிறார்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எந்தவிதமான தொந்தரவும் இருந்துவிடக் கூடாது என்பதாலேயே வார இறுதியில் சந்திப்பது என்று திட்டமிட்டோம். அதேபோல் அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமல்லவா?. அதற்காகவும் தான் ஓய்வுநாளில் பிரச்சாரம் செய்கிறேன்." என்று கூறினார் விஜய்.

தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

"நாம் செல்கின்ற இடத்தில் எல்லாம் நேரம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது எனக் கூறினால் நான் என்ன தான் பேசுவது. நம் கூட்டத்தில் மின் தடை ஏற்படுகிறது, மைக் வேலை செய்யவில்லை. ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமர் மோதியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ வருகின்றபோது இந்த மாதிரி பவர் கட் அல்லது வயர் கட் நடக்குமா?. நமக்கு நடப்பதைப் போன்ற கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதிப்பார்களா?"

"முதல்வரிடம் நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை, எங்கள் இயக்கமும் அதற்கு ஆள் இல்லை. மக்களைச் சந்திக்க ஏன் இத்தனை தடை விதிக்கிறீர்கள்?" என அவர் பேசினார்.

அதேசமயம் மீனவர்கள் பற்றி பேசும்போது மத்திய அரசை விமர்சித்த விஜய், "மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நமது மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் எனப் பிரித்துப் பார்த்து பேசும் பாசிச பாஜக அரசு" எனக் கூறினார்.

திமுக குறித்த விஜயின் விமர்சனம் TVK திருவாரூரில் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்

அதைத் தொடர்ந்து மாலையில் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், "திருவாரூர் சொந்த மாவட்டம் என முதலமைச்சர் பெருமையாக சொல்கிறார். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாகக் காய்கிறது. திருவாரூர் மாவட்டத்தை கண்டுகொள்ளவில்லை. உங்களது அப்பா பெயரில் பேனா வைக்க சொல்கிறீர்கள், அனைத்து இடத்திற்கும் அவர் பெயர் வைக்கிறீர்கள். ஆனால், உங்களின் அப்பா பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட இல்லையே." என்று கூறினார்.

"திருவாரூர் பல்கலைக்கழகத்தில் எல்லாப் படிப்புகளும் இருக்கிறதா? திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே மருத்துவம் பார்க்கிற நிலைமைதான் உள்ளது" என்று கூறினார்.

விஜய் கருத்துக்கு திமுகவின் பதில் என்ன? Facebook தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (கோப்புப் படம்)

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட பரப்புரைகளில் தவெக தலைவர் விஜய் தெரிவித்த கருத்துகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "ஒரு பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது முதல் கட்டுப்பாடுகள் விதிப்பது வரை என அனைத்தும் காவல்துறையின் கையில் உள்ளது. அதில் தமிழ்நாடு அரசோ அல்லது திமுகவோ ஒருபோதும் தலையிடாது" என்று கூறினார்.

"கடந்த வருடம் சேலத்தில் திமுகவின் இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிடம் சென்றபோது அவர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள். முதலில் நாங்கள் கேட்ட இரண்டு இடங்களிலும் அனுமதி மறுத்துவிட்டு, பிறகு மூன்றாவது முறையாக கேட்கும்போது பெத்தநாயக்கன்பாளையத்தில் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தார்கள்" என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டம் ஒழுங்கு விஷயத்தில் காவல்துறையினர் கூறுவதைத் தான் நாம் பின்பற்ற முடியும். ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ அல்லது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி" என்று கூறினார்.

முதலைச்சர் ஸ்டாலின் மீதான விஜயின் விமர்சனங்கள் குறித்து பேசிய ரவீந்திரன், "அரசியல் முதிர்ச்சியின்றி விஜய் பேசுவதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் இல்லை" என்று கூறினார்.

'அதிமுக-வுக்கு மாற்று தவெகவா?' X/EDAPPADI PALANISAMY எடப்பாடி பழனிசாமி ( கோப்புப் படம்)

"தொடர்ந்து திமுகவைக் குறிவைத்து பரப்புரைகளில் பேசுவதன் மூலம், திமுகவின் முதன்மை எதிரி தன்னுடைய கட்சி தான் என்ற பிம்பத்தை உருவாக்க விஜய் முயற்சிக்கிறார்" என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுக்கு எதிரான மனநிலை என்பது தமிழ்நாட்டில் பெரிய அளவில் இல்லை. ஆனால், தனது ரசிகர்களைக் கடந்து, இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர்களில் கணிசமானோர் 'ஒரு புதிய தலைவருக்கு வாய்ப்பு அளிக்கலாமே' என்ற எண்ணத்தில் இருப்பார்கள், அவர்களைக் கவரவே தன்னை திமுகவின் எதிரியாகவும், 'திமுக Vs தவெக' என்ற அரசியலை முன்வைத்து, தன்னை அதிமுகவுக்கு மாற்றாகவும் நிறுவ முயல்கிறார்" என்கிறார்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால் விஜய் திமுகவை தொடர்ந்து விமர்சிப்பது எதிர்பார்த்த ஒன்றுதான், அதில் தவறில்லை எனக் கூறும் பிரியன், "ஆனால், தான் பேசுவதில் இருக்கும் உண்மைத்தன்மையையும் அவர் சரிபார்க்க வேண்டும். திருவாரூர் பல்கலைக்கழகம் குறித்துப் பேசுகிறார், ஆனால் அது மத்திய அரசின் கீழ் வரும் ஒரு பல்கலைக்கழகம். அதையும் திமுகவையும் ஏன் இணைத்துப் பேச வேண்டும்?" என கேள்வி எழுப்புகிறார்.

'திமுக எதிர்ப்பு மட்டுமே போதாது'

"திமுக எதிர்ப்பு என்ற யுக்தி, இளைஞர்களிடம் எடுபடலாம். அதைக் கடந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களிடம் தாக்கம் ஏற்படுத்த விஜய் விரும்பினால், அதற்கு இந்த யுக்தி நிச்சயம் போதாது" என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி.

"2021ஆம் ஆண்டின் மாநில தேர்தலில், திமுக கட்சி பெற்ற வெற்றியில் 'பாஜக எதிர்ப்பு' என்ற பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்தது. இப்போதும் அதையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது திமுக, அப்படியிருக்க திமுகவை மட்டுமே அதிகமாக விஜய் விமர்சிப்பது 'அவர் மறைமுக பாஜக ஆதரவாளர்' என்ற கருத்தை வலுவடையச் செய்யும்" என்கிறார் சிகாமணி.

"திமுக எதிர்ப்பு வாக்குகளை குறிவைத்து அரசியல் செய்ய அதிமுக-பாஜக, நாம் தமிழர், பாமக ஆகிய கட்சிகளும் முயல்கின்றன. அப்படியிருக்க அவர்களிடமிருந்து தனித்து தெரிய திமுக எதிர்ப்பைக் கடந்து ஒரு அரசியல் பாணியை விஜய் முன்னெடுக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.