திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சிறுசோழன்பட்டியில், குடும்பத்தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக கணவரை தூக்குமருந்து கலந்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (43). விவசாயியான இவர், பக்தர்கள் இடையே “அலகு குத்தும்” தொழிலும் செய்துவருகிறார். அவரது மனைவி விஜயா (36). இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான பாலு (35) என்பவருடன் குமாருக்கு தொழில்ரீதியான பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் மிக நெருக்கமானதாக மாற, பாலு அவ்வப்போது குமாரின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இந்த சந்திப்புகள் வாயிலாக, விஜயாவுக்கும் பாலுவுக்கும் இடையே தொடர்பு உருவாகி, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி, குமார் திடீரென உயிரிழந்தார் என தகவல் வெளியாக, உறவினர்கள் வந்தபோது வயிற்று வலியால் இறந்ததாக விஜயா கூறியதாக தெரிகிறது. உடனடியாக இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட துவங்கப்பட்டது. இதற்கிடையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது குமார் மீது சுமார் ரூ.15 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, விஜயா மீது அவர் கடுமையாக விமர்சனம் மேற்கொண்டுள்ளார். மேலும், “கடனை நீயே அடைத்துக்கொள்” என்று திட்டியதிலிருந்து, விஜயா மற்றும் பாலு இருவரும் குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
குமாருக்கு வயிற்றுவலி ஏற்படும் போதெல்லாம் முருங்கை இலை ‘சூப்’ குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விஜயா ஒரு மருந்துக் கடையில் இருந்து தினமும் தூக்குமருந்துகள் வாங்கியுள்ளார். அந்த மருந்துகளை கலந்து குமாருக்கு ‘சூப்’ அளித்துள்ளார்.
அதில் குமார் மரணமடையாததை கண்டதும், விஜயா பாலுவை அழைத்து வர, அவர் குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், இருவரும் பூ பறிக்க சென்றதாக நடித்து, பின்னர் விஜயா கணவர் பேசாமல் இருப்பதாக அலறி உறவினர்களிடம் நடித்து, இயல்பான இறப்பு போல காட்ட முயன்றுள்ளார்.
இந்த நாடகத்தில், ஒரு உறவினருக்கு சந்தேகம் தோன்றியதையடுத்து, அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இது கொலை என உறுதி செய்து, விஜயா மற்றும் பாலுவை கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் தந்தையை இழந்தும், தாயும் கைது செய்யப்பட்டதால், குழந்தைகள் மூவரும் தற்போது எந்தவிதமான ஆதரவுமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.