தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான நேரம் வந்துவிட்டது - டாக்டர் கிருஷ்ணசாமி..!
Top Tamil News September 22, 2025 12:48 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டர் கிருஷ்ணசாமி மாநில மாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். ராஜபாளையத்தில் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

சாத்தூரில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இந்த கோவில் முன்பு இருக்கன்குடி ஊராட்சி எல்லைக்குள் இருந்தது. ஆனால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து 30 வருடங்களுக்கு முன்பு உள்நோக்கத்துடன் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கிராமத்திற்கு மாற்றினர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. எனவே கோவிலின் எல்லையை மீண்டும் இருக்கன்குடி ஊராட்சிக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மேலும், கோவிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்களாக இருக்கிறார்கள். இதனால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசின் அறங்காவலர் சட்டப்படி தகுதி உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அறங்காவலராக இருக்க வேண்டும். பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கம், பணம் ஆகியவற்றை வைத்து சுமார் ரூ.130 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படுகிறது. ஆனால் அது தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு பயன்படாத வகையில் கட்டடம் கட்டப்படுவதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்காக வரும் 24ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

வரும் தேர்தலில் ஒரே கட்சி ஆட்சிக்கு முடிவு வரும். ஒரே மாதிரியான கருத்துடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சி மலரும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறது. இதே மாதிரி பல கட்சிகளும் கேட்கும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான நேரம் வந்துவிட்டது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரியின் கருத்தை புறந்தள்ள முடியாது.

எடப்பாடி பழனிச்சாமி ஜாதி சகதிக்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது. ஓட்டுக்காக ஒரு சமுதாயத்திற்கு மட்டும் அறிவிப்புகள் வெளியிட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை" என்ற பழமொழிக்கு ஏற்ப எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் என்று அவர் விமர்சித்தார்.

2021 தேர்தலுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தது "பிள்ளையார் பிடிக்க குரங்கானது" போல் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசாங்கம் அனைவருக்கும் பொதுவான அரசாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நிதானமாக கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.