Ilayaraja:சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் அந்த இடத்தை பிடிக்க அவர்கள் கடந்து வந்த பாதை, சந்தித்த பிரச்சனைகள், அவமானங்கள், தோல்விகள், சந்தித்த வறுமை ஆகியவற்றை பற்றி யாரும் பேச மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தங்களுக்கு என ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள்.
அதற்குப் பின்னால் கடுமையான உழைப்பு மட்டுமல்ல. பல வலிகளும், வறுமையும் இருக்கிறது.
இசையில் பெரிய சாதனையை செய்தவர் இளையராஜா. 80களில் கோலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர். இசையமைப்பாளராக ஆசைப்பட்டு தேனி மாவட்டத்திலிருந்து சென்னை வந்து பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்து கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் மூலம் அன்னக்கிளி படத்தில் இசையமைத்து உச்சம் தொட்டவர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனது சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து இசை கச்சேரிகளை நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் இவர்களுடன் இயக்குனர் பாரதிராஜாவும் சேர்ந்து கொண்டார். இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகிய மூவரும் சென்னை வந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது பாரதிராஜாதான். அவரின் அறையில்தான் இவர்கள் மூவரும் தங்கியிருந்தனர். பாரதிராஜா இயக்குனராகும் முயற்சியில் இருந்தபோது, இளையராஜா இசையமைப்பாளராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நானும், பாரதிராஜா, அண்ணன் இளையராஜா, பாஸ்கர் நாங்க நாலு பேரும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ஒரு வாரமெல்லாம் சாப்பிடாம இருந்திருக்கோம். அப்ப இளையராஜா ஒரு ஆட்டோமொபைல்ல வேலை செஞ்சார். அவருக்கு தினமும் ஒரு ரூபா சம்பளம். கடவுள் மாதிரி அப்பஎங்களுக்கு கிடைச்ச ஒன்னு ‘மாடன் பிரட்’. அந்த பிரட் 90 காசு. அது ஒரு பிரட் வாங்கி, 10 காசுக்கு சர்க்கரை வாங்கி அத நாலு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம்’ என சொல்லியிருக்கிறார்.