பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தால் யாருக்கு அதிக லாபம்?
BBC Tamil September 21, 2025 09:48 PM
Reuters பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. இப்போது, இரு நாடுகளும் ஒரு புதிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் இந்த வாரம் ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பாகிஸ்தான் ஒரு ராணுவ சக்தியாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக போராடி வருகிறது, அதே நேரத்தில் சௌதி அரேபியா பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்ததாக இருந்தாலும், ராணுவ ரீதியாக பலவீனமானது.

சன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் வரலாற்று ரீதியாக வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் போது சௌதி அரேபியா பலமுறை பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது, அதற்கு ஈடாக பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு உறுதியளித்து வந்தது.

ஆனால் சமீபத்திய ஒப்பந்தம் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அந்த ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.

இதைத் தவிர, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால், மற்ற நாடும் அத்தகைய தாக்குதலைத் தன் மீதான தாக்குதலாகக் கருதும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விஷயம் .

அதாவது இப்போது பாகிஸ்தான் அல்லது சௌதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

இனி இரு நாடுகளின் தரைப்படை, வான்படை, கடற்படை இணைந்து செயல்படும். உளவுத்துறை தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும்.

மறுபுறம், பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளதால், அது வளைகுடாவில் சௌதி அரேபியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதமாக பார்க்கப்படுகிறது.

FAROOQ NAEEM/AFP via Getty Images அணு ஆயுதத் திறன் கொண்ட ஒரே முஸ்லிம் நாடு பாகிஸ்தான்.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதல், அரபு உலகில் பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடர்ந்து நடந்து வரும் சூழல் மற்றும் உலக அரசியல் சூழலின் பின்னணியில், இது சௌதி அரேபியாவிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

"எங்கள் சகோதர உறவுகள் ஒரு வரலாற்று திருப்புமுனையில் உள்ளன. எதிரிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்று பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி, "சௌதி அரேபியாவிடமிருந்து கிடைக்கும் பணத்தில் பாகிஸ்தான் அமெரிக்க ஆயுதங்களை வாங்க முடியும்" என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தூதர் மலிஹா லோதி, "இந்த ஒப்பந்தம் மற்ற அரபு நாடுகளுக்கும் வாய்ப்புகளைத் திறந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், ஆய்வாளர்கள் இதை பாகிஸ்தான்–சௌதிஅரேபியா உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதுகின்றனர்.

ஸ்டிம்சன் மையத்தின் தெற்காசிய விவகார இயக்குநர் எலிசபெத் த்ரெக்ஹெல்ட், 'இது சௌதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தானுக்கு எரிசக்தி மற்றும் நிதிப் பாதுகாப்பு பெறும் திறனை வலுப்படுத்தும்' என்று ஒரு பகுப்பாய்வில் கூறியிருந்தார்.

ஆனால் ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பெல்ஃபர் மைய ஆராய்ச்சியாளரும், லாகூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ரபியா அக்தர், 'இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான பல தசாப்தங்களாக நீடித்த ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது. ஆனால் இது பெரிய மற்றும் புதிய உறுதிமொழி அல்ல' என்று கூறினார்.

"பாகிஸ்தானுக்கு அடித்த லாட்டரி" @Spa_Eng சௌதி அரேபியா பலமுறை பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.

இது பாகிஸ்தானுக்கு பல பெரிய நன்மைகளைத் தரக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார நிபுணரும் பேராசிரியருமான முக்தார் கான், "இது பாகிஸ்தானுக்கு ஒரு லாட்டரி போன்றது" என்று கூறுகிறார்.

"சௌதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தான் அதிக நிதி உதவியைப் பெறும், மேலும் இது பாகிஸ்தான் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த உதவும். பாகிஸ்தானின் பாதுகாப்புத் திறன்களில் சௌதி அரேபியா அதிக முதலீடு செய்யும்" என்று பேராசிரியர் கான் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் ராணுவ மோதல் ஏற்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டிருந்தது, சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் நடந்து வருவதாகக் கூறியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதற்கு முன், சௌதி அரேபியா பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்குமா என்பதை இந்தியா சிந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"சௌதி அரேபியா பாகிஸ்தானைத் தாக்கினால் பாகிஸ்தானை நேரடியாக ஆதரிக்குமா என்பதை இந்தியா இப்போது பரிசீலிக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான இந்தியர்கள் சௌதி அரேபியாவில் பணிபுரிகிறார்கள். இந்த இந்தியர்களின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்" என்று பேராசிரியர் முக்ததர் கான் கூறுகிறார்.

பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைக்குமா? Getty Images இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சௌதி அரேபியா பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளித்து வருகிறது, பொருளாதார உதவிகள், கடன்கள், எண்ணெய் கொள்முதல் மீதான ஒத்திவைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களில் கணிசமான முதலீடுகளை சௌதி வழங்குகிறது.

இந்த ஆண்டு, சௌதி அரேபியா பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் கொள்முதல்களுக்கு கட்டணத்தை தாமதமாக செலுத்தும் சலுகையை வழங்கியுள்ளது.

இதேபோல், 2018-ஆம் ஆண்டிலும் சௌதிஅரேபியா பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் கொள்முதல்களுக்கு தாமதமாக கட்டணம் செலுத்தும் சலுகையை வழங்கியது.

பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பை சமநிலைப்படுத்த சௌதி அரேபியா பல முறை உதவியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், சௌதி அரேபியா பாகிஸ்தானின் மத்திய வங்கியில் நேரடியாக 1.5 பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்தது.

அதைத் தொடர்ந்து, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சௌதி அரேபியா பாகிஸ்தானுக்கு தலா 3 பில்லியன் டாலர்களை வழங்கியது.

நேரடி உதவியைத் தவிர, பாகிஸ்தானுக்கு நிவாரங்களை வழங்கியுள்ள சௌதி அரேபியா, பெரும் முதலீடுகளையும் செய்துள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் சௌதி அரேபியாவிடமிருந்து அதிக நிதி உதவியைப் பெற முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"பாகிஸ்தான் இப்போது சௌதி அரேபியாவின் பணத்தைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான அமெரிக்க ஆயுதங்களை வாங்கலாம். டிரம்ப் நிர்வாகம் ஆயுதங்களை விற்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது" என்று முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி ஒரு கூறியிருந்தார்.

ஆற்றல் பாதுகாப்பு

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எரிசக்தி பாதுகாப்பும் கிடைக்கும்.

பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் சௌதி அரேபியாவிலிருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள எண்ணெயை வாங்குகிறது, சில சமயங்களில் சௌதி பாகிஸ்தானுக்கு தாமதமாக பணம் செலுத்தும் வசதியையும் வழங்குகிறது.

நெருக்கடி காலங்களில் பாகிஸ்தான் இப்போது சௌதி அரேபியாவை அதிகம் சார்ந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பல துறைகளில் மேலும் வலுப்படுத்தும். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக பாகிஸ்தான் சௌதி அரேபியாவை அதிகம் சார்ந்து இருக்க முடியும்" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதி ஒரு பகுப்பாய்வில் தெரிவித்திருந்தார்.

பிராந்தியத் தாக்கம் Getty Images பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ், சமீபத்திய ஆண்டுகளில் அரபு நாடுகளுடனான உறவுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது. சௌதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் ஒப்பந்தம் அரபு பிராந்தியத்தில் அதை மிகவும் பொருத்தமானதாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் பதற்றமாகவே இருந்து வருகின்றன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா மத்திய கிழக்கில் தனது உறவுகளையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தானை இந்தப் பிராந்தியத்தில் மிகவும் தீவிரமான சக்தியாகக் காணலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், மற்ற அரபு நாடுகளும் இதுபோன்ற ஒப்பந்தங்களில் பாகிஸ்தானுடன் இணைய வாய்ப்பு உள்ளது. அந்த சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானின் அணுசக்தி திறன்கள் கிடைக்கும் என்றும் அவர் ஜியோ டிவியுடனான உரையாடலில் கூறினார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, பாகிஸ்தானுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களைச் செய்ய மற்ற அரபு நாடுகளுக்கு ஒரு அழைப்பாகவும் கருதப்படலாம்.

சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் முக்தர் கான் இதுகுறித்து கூறுகையில், "இஸ்ரேலின் தாக்குதலுக்கு கத்தாரால் பதிலளிக்க முடியவில்லை. அரபு நாடுகள் ஆயுதங்களுக்காக அதிக அளவில் செலவு செய்துள்ளன, ஆனால் அவர்களிடம் போர் அனுபவம் இல்லை. பாகிஸ்தான் ராணுவம் பல போர்களை நடத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய கிழக்கில் பாகிஸ்தானை ஒரு தீவிர சக்தியாகக் காணலாம்"என்றார்.

இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு பிராந்திய அளவில் புதிய முக்கியத்துவத்தைத் தரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.