தமிழ் மொழியில் பொதுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் (100/100) பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
“பள்ளிக் கல்வித் துறை தனது இலக்குகளை மிஞ்சி செயல்பட்டு வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இரு கண்களாக இருக்கின்றன. இவை மூலம் தமிழகத்தில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, “தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்கில், பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் தமிழ் மொழியின் மேன்மையை உணர்வதோடு, கல்விக்கான ஆர்வமும் அதிகரிக்கும்.”
அதனுடன், 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பணியில் இணைந்துள்ளதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
“ஆசிரியர்களே, நம்மிடம் 6 மாதத்தில் பொதுத் தேர்வுகள் வருகிறது; அதுபோல் எங்களிடம் பொதுத் தேர்தல் வருகிறது. நீங்கள் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். மேலும் இது அரசியல் பேசுவது அல்ல, அறிவு சார்ந்த முயற்சிகளை பகிர்வதே என் நோக்கம்,” என்றும் அமைச்சர் கூறினார்.