ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளான கார்த்திகா (25) ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குவாரி ஒன்றில் சங்கர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி கார்த்திகா அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேக்கரி ஒன்றில் கேசியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலையில் சங்கர் எழுந்து பார்த்தபோது மனைவி வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் கார்த்திகா உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் சங்கரிடம் மனைவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான மூன்று மாத காலம் ஆவதால் பழனி கோட்டாச்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த மூன்றே மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.