நாகையில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு!
TV9 Tamil News September 21, 2025 11:48 PM

நாகப்பட்டினம், செப்டம்பர் 21 : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அரசியல் களத்திற்கு புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு என்ற சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த வாரம் திருச்சி, அரியலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பெரம்பலூரில் பரப்புரை மேற்கொள்ள இருந்த நிலையில், தொண்டர்கள் அதிகளவு கூடியதால், சரியான நேரத்திற்கு பெரம்பலூர் சென்றடைய முடியவில்லை.

இதனால், கடைசி நேரத்தில் பெரம்பலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். முதற்கட்டமாக நாகப்பட்டினர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினர். பெண்கள், இளைஞர்கள் என எக்கச்சக்கமானோர் பரப்புரையில் ஈடுபட்டனர். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் விஜய் உரையாற்றினார்.

Also Read : பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி.. திடீரென ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்.. நடந்து என்ன?

தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், விஜய் பிரச்சாரத்தின்போது பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக  தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயின் பிரச்சாரத்தை காண, தவெக நிர்வாகிகள் மாதா திருமண மண்டபத்தின் சுற்று சுவர் மீது ஏறி அமர்ந்திருந்தனர். இதனால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த மண்டபம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமானதாகும்.

Also Read : பஸ், ரயில் மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்… நாளை அறிமுகமாகும் புதிய செயலி.. என்னென்ன வசதிகள் இருக்கு?

இந்த சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக நாகை டவுன் காவல் நிலையத்திற்கு மண்டபம் மேலாளர் புகார் கொடுத்துள்ளார். அதில் மண்டபத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதனை அடுத்து, பொது சோத்தை சேதப்படுத்தியதற்காக 5 பிரிவுகளின் மீது போலீசார் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, திருச்சி பரப்புரையின்போதும், பொது சொத்துகளை சேதப்படுத்தியதற்காக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது நாகை பரப்புரையில்  தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.