மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது வாட்ஸ்அப் உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப்பில், பல மொழிகளில் உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதை எளிதாக்கும் வகையில், ஒரு செய்தியை அழுத்தி பிடிக்கும்போது, அதில் "மொழிபெயர்ப்பு" என்றொரு புதிய விருப்பத்தேர்வு தோன்றும். அதனை தேர்ந்தெடுத்து, தேவைப்படும் மொழியை தேர்வு செய்தால், அந்த செய்தி உடனடியாக மொழிபெயர்க்கப்படும்.
தற்போது இந்த அம்சம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சோதனை முறையில் உள்ளது. ஆரம்பகட்டமாக, ஆண்ட்ராய்டில் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, போர்ச்சுக்கீசு, ரஷிய, அரேபிய ஆகிய ஆறு மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும். ஐபோன் பயனர்களுக்கு, இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரியன், மாண்டரின், உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி கிடைக்கிறது.
இந்த புதிய அம்சம், வெவ்வேறு மொழி பேசும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எளிதாக உரையாட உதவும். இதன் மூலம், மொழி ஒரு தடையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran