திண்டுக்கல்: ``கார், பணம் திருப்பி தரவில்லை'' - மாநகர காங்கிரஸ் தலைவர் மீது கவுன்சிலர் புகார்
Vikatan October 14, 2025 07:48 AM
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ்

திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும், 21வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக்.

இவர் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மணிகண்டன் மீது 2-வது முறையாகப் புகார் கொடுத்தார்.

திண்டுக்கல் காங்கிரஸ் தலைவர் மீது கவுன்சிலர் புகார்

அந்த புகாரில், "திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வரும் மணிகண்டன் என்னுடைய இன்னோவா காரை, வெளியூர் சென்று வருவதாக வாங்கிச் சென்று திரும்ப ஒப்படைக்கவில்லை.

மேலும், நேரடியாகவும் வங்கி மூலமும் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கினார். வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அடியாட்களை வைத்துக் கொலை மிரட்டல் விடுகிறார்.

இது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வரும் மணிகண்டன் கேரள மாநில பதிவு எண் கொண்ட வெள்ளை நிற சபாரி காரை கருப்பு நிறமாக மாற்றி போலியாக திண்டுக்கல் பதிவு எண் போட்டு பயன்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன்

எனவே என்னுடைய கார், பணம் ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் மீது பண மோசடி செய்துவிட்டதாக காங்கிரஸ் மாநகராட்சி 21வது கவுன்சிலர் கார்த்திக் அளித்த 2 புகார் உட்பட 3 புகார்கள் எஸ்.பி. அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.