தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்ததோடு அவருக்கு தலைமை பண்பே இல்லை என தெரிவித்தது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஒரே நாளில் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கியது எப்படி என சரமாரி கேள்விகளை முன் வைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
இந்த நிலையில் கரூர் வழக்கு தொடர்பாக தங்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்களான பிரபாகரன், செல்வராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இவர்கள் தங்களையே மாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.