தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஆரம்பமே அமர்களமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதியிலிருந்து விலகிய நிலையில் வளிமண்டல கீழடுக்கு காற்று திசை மாறி, மேற்கு காற்று கிழக்கு–வடகிழக்கு திசையில் வீசும் நிலை உருவாகி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
அமுதா மேலும் கூறுகையில், “அக்டோபர் 18ம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிக மழையைத் தந்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளில் மட்டுமே குறைவாக பெய்துள்ளது. வடமாவட்டங்களில் இயல்பாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ மழை பெய்யலாம்; தென்மாவட்டங்களில் இயல்பாகவோ அல்லது அதைவிட குறைவாகவோ இருக்கலாம். எனினும், எந்த இடத்தில் துல்லியமாக மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது என்றார்.
தற்போது வடதமிழக கடலோரம், வட ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த சுழற்சிகளின் தாக்கத்தால் இன்று தமிழ்நாட்டின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை, கோவை மலைப்பகுதி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேவேளை, தீபாவளி தினமான அக்டோபர் 20ம் தேதியன்று மழை பெய்யுமா என்ற கேள்விக்கு, “துல்லியமான கணிப்பு ஐந்து நாட்களுக்கு முன்பே கூற முடியும்,” என அமுதா விளக்கம் அளித்தார். வானிலை ஆய்வாளர்கள் பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்தர் இருவரும் வடதமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும், தீபாவளி தினத்தில் வியாபாரிகளை பாதிக்கும் அளவுக்கு கனமழை ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?