கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தடை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இந்த மன்றத்தில் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இது தொடர்பான அறிக்கை ஏற்கெனவே தரப்பட்டிருக்கிறது என்றாலும் பேசியவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் எனது பதிலை தெரிவிப்பது என்பது கடமையாக கருதுகிறேன். கோல்ட்ரிஃப் சிரப் மருந்து என்பது கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. இது மிகவும் கவனிக்க கூடிய விஷயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வதற்கு அங்கிருந்து யாரும் இங்கு இருக்கும் Drug Control அலுவலகத்திற்கோ, சம்மந்தப்பட்ட துறை அலுவர்களுக்கோ நேரிடையாக சொல்லவில்லை, இமெயில் கடிதத்தில் அக்டோபர் 1ஆம் தேதி வருகிறது, அக்கடிதத்தில், 04.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரம் பெறப்பட்டது.
இது தொடர்பாக, 01-10-2025 விடுமுறை தினமாக இருந்தாலும், அன்றைய தினமே சுமார் 4 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு, M/s.ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது (Sales Banned) அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் சிரப்பில் (Coldrif Syrup) 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது. மேலும், மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 02-10-2025 அன்றே மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய மருந்தை பற்றிய விவரங்கள் எல்லா மருந்துகள் ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, 02-10-2025 அன்று கோல்ட்ரிஃப் சிரப் முடக்கம் செய்யப்பட்டதும் அல்லாமல் M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் அனைத்து மருந்துகளும் முடக்கம் செய்யப்பட்டது. மருந்து ஆய்வாளர்கள் குழு மேற்கொண்ட தொடர் ஆய்வில் (01-10-2025 to 02-10-2025) மருந்து விதிகள் 1945 இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாலும், கோல்ட்ரிஃப் சிரப், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டதாலும், 03-10-2025 அன்றே, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு (Stop Production Order) பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது.
மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டது. மத்திய பிரதேசத்தில் முதல் உயிர் இழப்பு 04.09.2025 அன்று ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடுத் துறைக்கு சுமார் 25 நாட்களுக்குப் பின்னரே, அதாவது, 01.10.2025 அன்றுதான் தகவல் அனுப்பப்பட்டது. அதாவது ஒரு மாநிலத்திற்கு மருந்து கொள்முதல் செய்யும்போது அந்த மாநிலத்தில் உள்ள மருந்து நிர்வாகத்துறை அந்த மருந்தினை ஆய்வு செய்ய வேண்டும். அந்த மருந்தினை நாம் பயன்படுத்த இருக்கின்றோமே பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அங்கு இருக்கும் Drug Controler ஆய்வு செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் மருந்து நிர்வாகத்துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் 04ஆம் தேதி இறந்த குழந்தைக்கு அந்த மருந்து நல்ல மருந்து என்று சான்றிதழ் தருகிறார்கள். பாதிக்கப்பட்டு ஒரு குழந்தை இறந்திருக்கிறது. தனியார் மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவர் பரிந்துரை செய்திருக்கிறார், தனியார் மருந்து கடையிலிருந்து இம்மருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது, ஒரு குழந்தை இறந்த நிலையில் 04.09.2025 அன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள Drug Controller மற்றும் அங்கிருக்கும் அமைச்சர் அவர்கள் இந்த மருந்து நல்ல மருந்து என்கிறார், நல்ல மருந்து என்று விட்டுவிட்டதால் சட்டமன்ற உறுப்பினர் திரு.அருள் அவர்கள் சொன்னதுபோல 25 குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள். இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள 126 மருந்துகளையும், தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து, அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக, 03.10.2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. மேலும், 03.10.2025 அன்றே Drugs Controller General of India (DCGI) மற்றும் Deputy Drug Controller, South Zone, Chennai அவர்களுக்கும் விரிவான அறிக்கை மற்றும் அந்நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்திய ஆணையும் அனுப்பப்பட்டது. மேலும் 03-10-2025, அன்றே மருந்து குறித்த எச்சரிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக coldrif syrup என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட diethylene glycol 48.6% நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை (criminal proceedings) எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை (show cause memo) 07.10.2025 அன்று மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களிடம் இருந்த கோல்ட்ரிஃப் சிரப்பின் மொத்த இருப்பும் 08.10.2025 அன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் (CRIMINAL) நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் 08.10.2025 அன்று புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு (Special Investigation Team), 09-10-2025 அன்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.ரங்கநாதன் என்பவரை கைது செய்கிறார்கள். மேலும் அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை இங்கு மன்ற உறுப்பினர்கள் சொன்னதுபோல 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனம் சிறு சிறு குற்றங்களுக்காக பலமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மன்ற உறுப்பினர் திரு.உதயகுமார் அவர்கள் பேசும்போது சொன்னார், இந்த கம்பெனி வந்தது 2011 அக்டோபர் 27ஆம் தேதி அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் இக்கம்பெனிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட உரிமம், இதை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை, பேசும்போது இங்கே சொன்னார்கள் 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது. இந்த நிறுவனங்களிடமிருந்து ஆண்டு ஒன்றிற்கு ஏற்றுமதி ஆகின்ற தொகை என்பது ரூ.12,000/- கோடியிலிருந்து ரூ.15,000/- கோடி வரை தமிழ்நாட்டிலிருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.பாலாஜி அவர்கள் சொன்னது போல அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின்போல ஒட்டுமொத்த மன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சொன்னதுபோல ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு களங்கம் வந்துவிடக்கூடாது, களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 20% மருந்து ஏற்றுமதி இந்தியா தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே 397 மருந்து நிறுவனங்கள் வாயிலாக ரூ.12000 கோடியிலிருந்து ரூ.15000 கோடி வரை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய அளவில் இந்த நன்மதிப்பிற்கு எந்தவகையிலும் குந்தகம் வந்து விடக்கூடாது என்கின்ற வகையில் அனைவரும் அக்கறையாக இருந்ததனால் ஏதோ திரு.உதயக்குமார் தமிழ்நாட்டில் நமது அரசு சரியான நடவடிக்கை எடுக்காத மாதிரியாகவும், மத்தியப்பிரதேச முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தமிழ்நாட்டை குறை சொல்லிவிட்டார்கள் என்பதாக இங்கு சொல்கிறார்கள். நாம் எந்த மாநிலத்தையும் இது செய்யவில்லை அது செய்யவில்லை என்று குறை சொல்வதைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதால் மிக அமைதியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தை மூடியது மட்டுமல்லாமல் நிரந்தமாக Closing order கொடுத்து மூடியிருக்கிறோம். பேசிய மன்ற உறுப்பினர்கள் ஒரு சில கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்கள் கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அனுமதியின்றி கெமிக்கல் நிறுவனங்கள் தயாரிக்கப்படுவதாக சொன்னார்கள், நிச்சயமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் துறை அமைச்சரோடு பேசி அந்த துறையின் அலுவலர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் அனுப்பி கடலூரில் இருக்கின்ற எந்த இரசயானம் தயாரிக்கும் நிறுவனங்களாக இருந்தாலும் அது லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக சொன்னார்கள், லைசென்ஸ் இல்லாத எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் யார் நடத்தினாலும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுத்து உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல யாராவது உரிமம் இல்லாமல் கம்பெனி நடத்துவதாக சொன்னாலும் தகவலை இரகசியமாக சொன்னால் இரகசியம் பாதுகாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.
அதேபோல் மன்ற உறுப்பினர் திரு.அசன் மௌலானா அவர்கள் சொன்னார்கள் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு Batch 126 வகையான மருந்துகள் என்றாலும் 1 மணிநேரத்திற்கு ஒரு Batch வெளியே போகும். 397 நிறுவனங்களிலும் இலட்சக்கணக்கான மருந்து ஒரு மாதத்திற்கு தயாராகி வெளியே போகும். இங்கு பேசும் போது Drug Inspectors காலிப்பணியிடம் இருப்பதாக சொன்னார்கள். காலிப்பணியிடம் என்பதே இருக்கக்கூடாது என்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருப்பதன் விளைவு, மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து காலிப்பணியிடங்கள் நிரப்பும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மருந்து கட்டுப்பாட்டுத்துறையில் 2 துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் 26 பேர், அதில் 24 பேர் பணியில் இருக்கிறார்கள், முதுநிலை மருந்து ஆய்வாளர்கள் 14 பேர் பணியில் இருக்கிறார்கள், மருந்து ஆய்வாளர்கள் 146 பேர் இருக்க வேண்டும் 137 பேர் இருக்கிறார்கள், 9 பேர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலாக அந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஒட்டுமொத்தமாக இந்த துறையைப் பொறுத்தவரை மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 191. இதில் 178 பணியிடங்களில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்த விற்பனையார்கள் குறித்து விசாரித்து வருகிறோம், அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த துறை அவசர அவசியமாக இந்தப் பணிகளை மேற்கொண்ட காரணத்தினால் உயிரிழப்புகள் என்பது ஒடிசாவிலே, புதுச்சேரியிலோ தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்த மருந்துகள் விற்பதற்கு தடை விதித்து அதற்கான அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்தி இந்த அளவிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எந்த மருந்து அவர்கள் மாநிலத்திற்கு வருகிறதோ அந்த மருந்தின் தன்மை அவர்களது மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளர் சரியாக ஆய்வு செய்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம், 25 நாட்கள் கழித்து இந்த மருந்து தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த மருந்து நல்ல மருந்து என்று சொல்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக இங்கு நமது மன்ற உறுப்பினர் பேசுவது என்பது வருத்தமாக இருக்கிறது.
இந்த அரசு நமது மக்கள் மீது எந்த அளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் சொன்ன இந்த தகவல்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இதேபோல் ஆய்வுகள் என்பது சட்டமன்ற உறுப்பினர் அருள் மணி சொல்லியிருப்பது போல 397 மருந்து நிறுவனங்களில் இரண்டு மூன்று நாட்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு ஆய்வு செய்கிறார்கள் என்று, தொடர்ந்து ஆய்வு செய்வார்கள், நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட உற்பத்தி Batch வாரியாக தயாரிப்பார்கள். 24 மணி நேரமும் Drug Inspector அவர்கள் அந்த கம்பெனியில் இருக்க முடியாது, 397 கம்பெனி என்றால் நம்மிடம் இருக்க கூடிய Drug Inspectorகள் 146 பேர் தமிழ்நாடு முழுவதும். அதுதான் ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்கள். மொத்த இடங்களே 146 தான். அதில் 137 பேர் பணியில் இருக்கிறார்கள். ஒரு கம்பெனியில் அவர்கள் சென்று காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு Batch ஆக பார்க்க முடியாது என்றாலும் சிறப்பு கவனம் எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஒன்றிய அரசு 3 வருடத்திற்கு ஒரு முறை நேரிடையாக வருகை புரிந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், 6 வருடமாக ஒன்றிய அரசு தொடர் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாதது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஒன்றிய அரசின் செயலாளர் அவர்களின் கவனத்திற்கு இது கொண்டு சேர்த்துள்ளோம். மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் ஏற்றுமதி குறித்து சொன்னார்கள், ஏற்றுமதி என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் பாதிப்பு என்று வருகின்றபோது அந்த பாதிப்பை தவிர்ப்பது என்பது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அதில் உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அனைத்து மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு தெரிவித்து நிச்சயம் 397 நிறுவனங்களும் ஒன்று மூடப்பட்டிருக்கிறது 396 நிறுவனங்களும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாலும் பொதுமக்களும் விளம்பரப்படுத்தப்படாத மருந்துகளை உட்கொள்வதும், மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் கிடைக்கின்ற மருந்துகளை வாங்கி உட்கொள்வது என்பது கூடுதல் கவனம் செலுத்த வேண்டாம் என்கின்ற வகையில் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.