`ரூ.8 லட்சம்' கேட்ட DIG வீட்டில், ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் பறிமுதல் - CBI அதிரடி
Vikatan October 18, 2025 02:48 PM
பஞ்சாப் டி.ஐ.ஜி ஹர்சரன் சிங்

பஞ்சாப்பில் உள்ள ரோபர் மண்டலத்தில் டி.ஐ.ஜியாக இருப்பவர் ஹர்சரன் சிங். இவர் பதேகர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் என்பவரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்டார்.

இப்பணத்தைக் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டினார். தனது கூட்டாளி கிருஷ்ணா மூலம் இப்பணத்தைக் கொடுக்கும்படி தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்து வந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் சி.பி.ஐ.யில் புகார்

அடிக்கடி கிருஷ்ணா பழைய இரும்பு வியாபாரிக்கு போன் செய்து பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார். அதோடு ஆகஸ்ட், செப்டம்பர் மாத லஞ்சப்பணமும் கொடுக்கப்படவில்லை என்று போனில் பேசிய ஆடியோவை ஆகாஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து நெருக்கடி அதிகரித்ததால் ஆகாஷ் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சி.பி.ஐ.யில் புகார் செய்தார்.

சி.பி.ஐ அதிகாரிகள் இது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி கிருஷ்ணாவிடம் ரூ.8 லட்சத்தைக் கொடுக்கும்படி ஆகாஷிடம் கேட்டுக்கொண்டனர்.

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள் டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் கைது

ஆகாஷ் அப்பணத்தை கிருஷ்ணாவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் மொகாலியில் உள்ள டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

கைதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு ரோபர், சண்டிகர், மொகாலியில் நடந்தது. இதில் ரூ.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு 1.5 கிலோ தங்க ஆபரணங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு மெர்சிடிஸ் கார், ஒரு ஆடி காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 22-க்கும் மேற்பட்ட ஆடம்பர கைக்கடிகாரங்கள், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானம், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள்

கிருஷ்ணா வீட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ஹர்சரண் சிங் பஞ்சாப்பில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். முன்னாள் டி.ஜி.பி. முல்லர் மகனான ஹர்சரண் சிங் கடந்த ஆண்டுதான் ரோபர் பகுதியில் டி.ஐ.ஜியாகப் பதவியேற்றார். இன்று கைது செய்யப்பட்ட இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.