வடகிழக்கு பருவமழை.. கரண்ட் போகுதா.. இந்த நம்பருக்கு கூப்பிடுங்க!
TV9 Tamil News October 19, 2025 05:48 PM

தமிழ்நாடு, அக்டோபர் 19: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கடந்த 2025, அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. அதற்கு சில தினங்கள் முன்னால் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இருந்தது. இது இயல்பை விட அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின் பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பருவ மழை காலத்தில் போதிய மின் தளவாடங்களை கையிருப்பு வைத்திருப்பதுடன் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார விநியோகம் மின்விபத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால் நுகர்வோருக்கு காரணம் சொல்லுங்க 

மேலும் பணியாளர்கள் மற்றும் மூத்த அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்ய வேண்டும். மாநில அளவில் மின் தளவாடப் பொருள்களை உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்கள் அல்லது மின் ஒயர்கள் மீது விழுந்து சேதம் அடையும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புடன் ஒருங்கிணைந்து உரிய பாதுகாப்புடன் மிகுந்த கவனத்துடனும் அதனை அகற்றி தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு குற்றாலம் போறீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு

அதுமட்டுமல்லாமல் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் மின்சார வாரிய அலுவலர்கள் தலைமையில் களப்பணி குழுக்கள், அவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தின் 94987 94 987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பேரிடர் தடுப்பு மேலாண்மை துறை நிலைமையை உன்னிப்பாக 24 மணி நேரமும் கவனித்து தக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.