அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதியிடம், தங்களை சட்ட அதிகாரிகள் என கூறிய மர்ம நபர்கள் “டிஜிட்டல் கைது” செய்யப்போவதாக மிரட்டி, போலியான கோர்ட்டு உத்தரவுகள் மூலம் ₹1.05 கோடி பணத்தை மோசடி செய்து பறித்த அதிர்ச்சிகரமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களை ஏமாற்றி, போலி நீதிமன்ற ஆவணங்கள் வழங்கி நம்ப வைத்ததாகக் கூறி, அந்த முதிய பெண் நேரடியாக இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை. சந்து சுதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணை தொடங்கியது.
நீதிபதிகள் சூர்யா கந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அமர்வு நேற்று இந்த வழக்கை விசாரித்தது.அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,"இது சாதாரண சைபர் மோசடி அல்ல. இதுபோன்ற குற்றங்களை விரைவாக விசாரிக்க, மத்திய மற்றும் மாநில போலீசாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்.
‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது கவலைக்குரிய அளவில் அதிகரித்து வருகிறது".அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,"நீதித்துறையின் பெயர், முத்திரை, நீதிபதிகளின் கையொப்பங்களைப் போலி செய்து அப்பாவி மக்களை மிரட்டுவது, நீதித்துறையின் நம்பிக்கையின் அடித்தளத்தையே குலைக்கும் செயல்.
இதுபோன்ற குற்றச்செயல்களை ஒரு சாதாரண மோசடியாகக் கருத முடியாது".இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. ஆகியோருக்கு விளக்கமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.