தீபாவளிக்கு 3 நாட்களில் 6.15 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.இதனால் சென்னை வெறிச்சோடிய காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னைவாசிகள் கடந்த 16-ந் தேதி முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
சென்னைவாசிகள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்து 378 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தீபாவளி பண்டிகைக்காக 17-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 16 மற்றும் 17-ந் தேதி ஆகிய 2 நாட்களில் 6 ஆயிரத்து 920 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் நேற்றும் ஏராளாமானோர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பஸ்களில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,926 பஸ்கள் மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தவிர சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட தென்மாவட்ட ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதே போன்று, சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் ஊர்களுக்கு கார்களில் புறப்பட்டதால் ஜி.எஸ்.டி. சாலையில் கார்கள் ஊர்ந்தபடி சென்றன. பரனூர் சுங்கச்சாவடிகளில் கார்கள் நீண்டநேரம் காத்திருந்து பயணித்தனர்.
இதனிடையே தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து இதுவரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 9.5 லட்சம் பேர் சிறப்பு ரெயில்கள் மூலமும், 6.15 லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலமும், ஆம்னி பஸ்களில் 2 லட்சம் பேர் வரையிலும், 1.5 லட்சம் பேர் வாகனங்கள் மூலமும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் சென்றதால் சென்னை மாநகர் வெறிச்சோடி காணப்படுகிறது.