பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் டியூட். கீர்த்தீஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை கொடுத்துள்ளவர் பிரதீப் என்பதால் என்பதால் இந்த படத்திற்கும் இளைஞர் மத்தியில் அதிக வரவேற்பு இருந்துது.
2கே கிட்ஸ் இளைஞர்களின் பிரதிபலிப்பாக பிரதீப் இருப்பதால் அவரின் படங்களை இளைஞர்கள் மிகவும் ரசித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் டியூட் படமும் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரேமேம் படம் மூலம் 2கே கிட்ஸ்களின் கனவு கன்னியாக மாறியுள்ள மமிதா பைஜூவை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரின் அப்பாவாக சரத்குமார் இதுவரை இல்லாத அளவுக்கு சுவாரஸ்யமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
டியூட் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸான நிலையில் இப்படம் இரண்டு மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று 2 நாட்களில் 45 கோடி வசூல் செய்திருப்பதாக இப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அனேகமாக இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை பெற்றுவிடும் என்கிறார்கள்.
இந்த படத்தில் தாலி செண்டிமெண்ட்டை காலி செய்யும்படி காட்சிகள் வருகிறது. அதேபோல், ஆணவக்கொலையையும், சாதியையும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் ‘தாலி ஒரு பொண்ணுக்கு முக்கியம் இல்ல.. அது மேல அவளுக்கு இருக்க செண்டிமெண்ட்தான் முக்கியம்’ என்பது போல வசனம் வருகிறது. மேலும், தாலியே கட்டிக்கொண்டாலும் பரவாயில்லை.. ஒரு பெண்ணோடு நான் எப்படி பழகுகிறோம் என்பதுதான் முக்கியம் என்பது போலெல்லாம் காட்சிகள் இருக்கிறது. தாலியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஒரு படத்தில் வடிவேலுவிடம் சத்யராஜ் ‘எனக்கு மணவறையில் உட்காருவதே பிடிக்காது. ஓமக்குண்டத்துல இருந்துவரும் புகை எனக்கு மூக்கில் எரிச்சல் வரும். சைனஸ் பிரச்சனை.. கண் எரியும்.. அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்றது. அதனால் நீ தாலிய கட்டிட்டா நான் கூட்டிட்டு போயிடுவேன்’ என சொல்லும் காமெடி காட்சியை பகிர்ந்து ‘15 செகண்டில் டியூட்’ என நெட்டிசன்கள் நக்கலடித்துள்ளனர்.