பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை வழக்கில் புதிய விவரங்கள் வெளியாகி வருகின்றன. மாரத்தஹள்ளி அய்யப்பா லேஅவுட் 4-வது கிராசில் வசித்த மகேந்திர ரெட்டி (31) மற்றும் அவரது மனைவி கிருத்திகா ரெட்டி (29) இருவரும் டாக்டர்கள். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கிருத்திகா ரெட்டி திடீரென உயிரிழந்தார்.
அப்போது, அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன் வந்த தடயவியல் அறிக்கையில், மனைவியை மகேந்திர ரெட்டி மயக்க மருந்து ஊசி மூலம் கொலை செய்தது வெளிச்சம் பார்த்தது.
இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்ததும், மாரத்தஹள்ளி போலீசார் மகேந்திர ரெட்டியை கைது செய்தனர். அவரை 9 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மனைவியை கொலை செய்ய அவர் 11 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
அதற்காக பலமுறை முயன்றும், வெற்றியடையவில்லை என்றும், இறுதியாக ஏப்ரல் மாதம் அந்த திட்டத்தை நிறைவேற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், திருமணத்தின் பிறகு, “உனக்கு யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள்… அதை நீக்க பூஜை செய்ய வேண்டும்” என்று மனைவியிடம் கூறி, அவரை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் கிருத்திகா அதை மறுத்து வந்ததால், அதில் ஏற்பட்ட மன அழுத்தமும், சொத்து விவகாரங்களும் சேர்ந்து, கொலை செய்ய தூண்டியது என போலீசார் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, மகேந்திர ரெட்டிக்கு ஒரு பெண் டாக்டர் உடன் நெருங்கிய தொடர்பும் இருந்தது என்றும், இதுவும் கிருத்திகாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட காரணமானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மாதவிடாய் கால வலி குறைக்கும் விதமாக மயக்க மருந்தை கிருத்திகாவுக்கு அடிக்கடி செலுத்தி வந்ததாகவும், இறுதியில் அதிகளவில் ‘புரோபோபோல்’ என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தியதால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
கிருத்திகா மரணத்துக்குப் பிறகு, மகேந்திர ரெட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்த பணியை விட்டு, உடுப்பி மாவட்டம் சுள்ளியாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். பின்னர், மனைவியின் தந்தையிடம் இருந்த சொத்துக்களை கைப்பற்ற முயன்றதும் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
தற்போது மகேந்திர ரெட்டி காவலில் இருந்து வருகிறார், மேலும் தினந்தோறும் வெளிவரும் புதிய தகவல்கள் பெங்களூரு நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.