தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மின்சாரத்துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை 17.10.2025 முதல் துவங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, மின்சாரத்துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சென்னை மாநகர மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு மையமான மின்னகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
ஆய்வுக்குப்பின், போதிய தளவாட பொருட்கள் ஆங்காங்கே முந்தைய பாதிப்புகளின் தரவுக்கேற்ப இருப்பு வைத்திருக்கவேண்டும். மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின் விநியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிசெய்யவும், மாநில அளவில் மின் தளவாடப்பொருட்கள் தேவைக்கேற்ப உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையற்ற மின்சார விநியோகத்தினை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின் கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும் பொது, உடனடியாக, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், மின்வாரிய அலுவலர்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.
துணைமின் நிலையங்கள், மின்னூட்டிகள், மின் மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். ஏதேனும் மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக, சம்மந்தப்பட்ட மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு மின்சாரம் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24x7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தினை “94987 94987” என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மழைகாலங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை மிகவும் கவனமாக இயக்குமாறும், அறுந்து விழுந்த மின் கம்பிகள் குறித்து உடனுக்குடன் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது மின்னகத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மின்னகம் மூலமாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:
1) ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
2) வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
3) வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது.
4) வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்கவேண்டும்.
5) நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
6) மின்சாரமீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.
7) வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்கவேண்டாம்.
8) மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்படவேண்டும்.
9) சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்படவேண்டும்.
10) தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்கவேண்டும்.
11) மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த வேண்டாம்.
12) மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
13) மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்தபுகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை “94987 94987” தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.