தேனியில் 1992க்குப் பின் மிகப்பெரும் கனமழை! நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலி...!- மாவட்டம் முழுவதும் நிவாரணப் பணிகள் தீவிரம்
Seithipunal Tamil October 19, 2025 05:48 PM

தேனி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது சாரல் மழையால் நனைந்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதும் வானம் திறந்து கொட்டியது. மழை எச்சரிக்கையின் காரணமாக மாவட்டம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றிரவு முழுவதும் கொட்டிய கனமழையால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.முல்லைப்பெரியாறு ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கம்பம்–சுருளிபட்டி சாலை கடும் சேதமடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்லாதவாறு போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.மழை வெள்ளத்தால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. காட்டாற்று வெள்ளம் 18-ம் கால்வாய், ஏகலூத்து ஓடை வழியாக ஊருக்குள் புகுந்ததால் கம்பம் மெட்டு காலனி வீடுகள் நீரில் சிக்கின.

பாதிக்கப்பட்டவர்களை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையிலான அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர்.சுருளிபட்டியில் தீபாவளி விற்பனைக்காக ஆடுகளை வளர்த்திருந்த லட்சுமணனின் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்க, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

உத்தமபாளையம் அருகே தேங்காய் களஞ்சியத்தில் இருந்த 6 ஆயிரம் தேங்காய்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தேவாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட கோழிகளும், 100-க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் பலியாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எம்.பி தங்கதமிழ்செல்வன், நிவாரண பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டார்.மேலும், கூடலூரில் கனமழையால் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக இரவில் நடந்ததால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.

கள்ளர் வடக்கு தெருவில் சாலை ஒரு பகுதி அரிந்து விழுந்தது மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. சிறுபுனல் மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்து தண்ணீர் புகுந்ததால், மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மேலும் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியின் டிராக்டர்கள் மற்றும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.1992-ம் ஆண்டுக்கு பின் தேனி மாவட்டம் ஒரே நாளில் இவ்வளவு அளவு மழை கண்டது இதுவே முதல் முறை. விவசாயிகளின் உழைப்பும், தீபாவளிக்காக வைத்திருந்த வியாபாரப் பொருட்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

தற்போது மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.