குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, வானிலை மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இதனுடன், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், அந்த பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகத் தொடங்கியுள்ளது.
இது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 24-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரங்களை நோக்கி வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 18) தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேசமயம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.