"காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும்" - ராமநாதர் கோவிலில் ரிஷப் ஷெட்டி!
Vikatan October 19, 2025 06:48 PM

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு காசிக்குப் பயணம் செய்த ரிஷப் ஷெட்டி, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ளார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும். காந்தாரா படமே ஈஸ்வருடடைய ஒரு கணத்தைப் பற்றி, காவல் தெய்வத்தைப் பற்றி எடுத்தது. படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ராமேஸ்வரத்தில் ரிஷப் ஷெட்டி

அதில் பார்வையாளர்களின் பங்கு எவ்வளவு இருக்கோ, அதே அளவு பார்வையாளர்களிடம் கொண்டு சேர்பதற்கான ஆசீர்வாதமும் இருந்தது. அந்த எண்ணத்தில்தான் ராமேஸ்வரம் வந்திருக்கிறேன். நல்ல தரிசனம் கிடைத்தது. அதிக நேரம் கருவறை முன் நிற்க முடிந்தது.

தமிழ்நாட்டுக்கு டப் செய்யப்பட்டு வந்த காந்தாரா இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு மக்களுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். மக்களின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக என்டெர்னெயின் பண்ணுவோம்." என்றார்.

ராமேஸ்வரத்தில் ரிஷப் ஷெட்டி

மேலும் ஓடிடி ரிலீஸ் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்துப் பேசியவர், "இப்போது தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடிடி வெளியீட்டுக்கு நேரமிருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் பற்றி நான் சொல்ல முடியாது தயாரிப்பு நிறுவனம்தான் பதிவிடுவார்கள். இயக்குநராக, எழுத்தாளராக மக்களுக்கு படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைத்தான் நான் பார்க்க முடியும். அவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.

காந்தாரா படம் தமிழகத்தில் வெற்றியடைந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நாம் என்னதான் சிட்டியில் வாழ்ந்தாலும் என்ன வேலை செய்தாலும், விவசாயம், கிராமத்துடன் ஒரு இணைப்பு இருக்கும். அதை ஸ்கிரீனில் பார்ப்பது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். படத்தில் காட்டப்படும் பழங்குடி கலாச்சாரமும் இயற்கை வழிபாடும் தமிழ்நாட்டிலும் இருப்பதனால் மக்கள் விரும்புகின்றனர் என நினைக்கிறேன்" எனப் பதிலளித்தார்.

காந்தாரா: "எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள்" - வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.