கரூர் பிரச்சார நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுக்க இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த ஆண்டில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
"கரூர் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நம் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்."
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.