தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய பொருட்கள் வர்த்தக சந்தையான எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில் திங்கட்கிழமை (அக்டோபர் 20) காலை, டிசம்பர் மாத ஒப்பந்தத்திற்கான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,28,005 என பதிவு செய்யப்பட்டது. இது 0.78 சதவீத உயர்வாகும். அதே நேரத்தில், வெள்ளியின் விலையும் 0.41 சதவீதம் உயர்ந்து கிலோகிராமுக்கு ரூ.1,57,240 ஆக உயர்ந்தது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு தளர்வடைந்ததுதான். உலகளாவிய சந்தைகளில் டாலர் விலை குறையும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வுசெய்வது வழக்கம். அதோடு, உள்ளூர் சந்தையிலும் தங்கத்திற்கு வலுவான தேவை காணப்பட்டது. கடந்த வாரம் தங்க விலை சரிந்த நிலையில் இருந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் முதலீட்டாளர்களை பங்குச் சந்தைகளில் நுழைய தூண்டியதால், தங்கம் விற்பனை அழுத்தத்துக்குள்ளானது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி வாங்கத் தொடங்கியுள்ளனர். ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறுகையில், தங்கம் மீண்டும் $4,255 வரை உயர்ந்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தங்கத்தின் நம்பிக்கையை உயர்த்துவதாகவும் தெரிவித்தார்.
இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களில் தங்க விலை 70 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதை நிபுணர்கள் கவனிக்கும்போது, அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் தங்க ETF முதலீடுகளில் அதிக நுழைவு ஆகியவை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதையுந்தான் வலியுறுத்துகின்றனர். SMC குளோபலின் வந்தனா பார்தி கூறுகையில், தங்கம் விலை ₹1,18,000 முதல் ₹1,20,000 வரை குறையும் போது முதலீடு செய்யும் போதே நன்மை அதிகம் எனக் கூறினார். அவர் மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ₹1,35,000 வரை சென்று உயர வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
அதேபோல், SS WealthStreet நிறுவனத்தின் சுகந்தா சச்சதேவா, தங்கம் தற்போது ‘overbought’ நிலையில் உள்ளதால், குறுகிய காலத்தில் சிறிய விலை சரிவு நிகழும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார். நீண்டகால பார்வையில், தங்கம் ₹1,45,000 முதல் ₹1,50,000 வரை உயரலாம் என அவர் கருதுகிறார்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தங்கம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள், சந்தை விலை குறையும் தருணத்திற்காக காத்திருந்து கட்டத்துக்கட்டாக முதலீடு செய்வது பாதுகாப்பான முடிவாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.