வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
மழை அதிமாக பெய்துள்ள மாவட்டங்களின் கலெக்டர்களிடம் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழை பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து மக்களுக்கு தேவையானவற்றை விரைந்து செய்து கொடுக்க அறிவுறுத்தினார். இந்த ஆலோசனையில் பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் "அதிக மழை பெய்துள்ள மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், முகாம்களில் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கவும்" மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைத்து குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்தாலும் நெல் கொள்முதல் பணிகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.