நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கி, தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், அவரது அரசியல் பயணம் தமிழ்நாட்டோடு மட்டும் நின்றுவிடாமல், தென்னிந்தியா முழுவதும் விரிவடைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேச தொடங்கியுள்ளன. இதற்கு காரணம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வகுத்துள்ள ஒரு அரசியல் வியூகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்க்கும் (51 வயது), பிரியங்கா காந்திக்கும் (53 வயது) கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, இருவருக்கும் இடையில் ஒருமித்த அரசியல் சித்தாந்தங்கள் (Ideology) ஒத்துப்போவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் குறிப்பாக தென் மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இரு தரப்பினருக்கும் உள்ளது. மேலும், அரசியலுக்கு இளைஞர்களை அதிக அளவில் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் இரு தலைவர்களுக்கும் ஒத்துப்போவதால், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி என்பது ஒரு இயல்பான கூட்டணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆரம்பத்தில் தமிழகத்தை மட்டுமே மையமாக கொண்டு கட்சியை அமைத்திருந்தாலும், பிரியங்கா காந்தியின் தரப்பிலிருந்து கிடைத்த ஆலோசனைகளின்படி, தனது கட்சியை தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் வளர்க்கும் அரிய வாய்ப்பு விஜய்க்கு தற்போது கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தலைமை வகுத்துள்ள வியூகம் என்னவென்றால், ராகுல் காந்தி வட இந்தியாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பிரியங்கா காந்தியின் முயற்சியால் த.வெ.க.வும் காங்கிரஸும் கைகோர்த்தால், தென்னிந்தியா முழுவதும் ஒரு பலமான கூட்டணி அமைப்பை உருவாக்கி, பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைக்க முடியும் என்பதேயாகும்.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த சாதகமான சூழலில், நடிகர் விஜய்யின் பிரபலம் மற்றும் மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்துவிட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலமாக அமையும்.
இதன் பிறகு, பிரியங்கா காந்தியின் திட்டப்படி, தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்த பிறகு, அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் ஆட்சியைப் பிடிப்பது கடினமான ஒன்றல்ல என்று காங்கிரஸ் தலைமை கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விஜய்யை ஒரு முக்கிய தலைவராக முன்னிறுத்தி, இளைஞர் வாக்குகளை ஈர்ப்பது பிரியங்காவின் மாஸ் திட்டமாக உள்ளது.
விஜய்யை பொறுத்தவரை, தனக்கு கிடைத்துள்ள காங்கிரஸ் ஆதரவு தென் மாநிலங்களுக்கான அரசியல் வாய்ப்பும் ஒரு ஜாக்பாட் போல அமைந்திருக்கிறது. வரவிருக்கும் நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அறிவிப்புகள் தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva