பெரம்பூர் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் பல்லாயிரம் வௌவால்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே உள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை 'வௌவாளடி' எனவும் மக்கள் அழைக்கின்றனர். பட்டாசுகள் வெடித்தால் வௌவால்கள் பாதிக்கப்படும் என்பதால் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை இப்பகுதி மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த வௌவால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராம மக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது.
வௌவால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை அமைத்து யாரும் வௌவால்களை இறைச்சிக்காகவும், பிற தேவைகளுக்காக வேட்டையாடாத வண்ணம் 3 தலைமுறைகளாக பெரம்பூர் கிராம மக்கள் பாதுகாத்து வருகிறனர்.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி அன்று வெடி வெடித்து கொண்டாடக்கூடிய நிலையில் இங்கு மட்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர். தீபாவளி மட்டும் இல்லாமல் இந்த ஊரில் திருவிழா, இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்வு என ஆண்டின் 365 நாட்களும் பட்டாசு வெடிப்பதில்லை.பட்டாசு சத்தத்தால் வௌவால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.