Tiruchendur: தொடங்கியது கந்த சஷ்டி.. திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
TV9 Tamil News October 22, 2025 03:48 PM

திருச்செந்தூர், அக்டோபர் 22: முருகப்பெருமானின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் வெகுவிமரிசையாக தொடங்கியது. தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கோயில்கள் உள்ளது. முருகப்பெருமானுக்கு ஏராளமான விசேஷ நாட்கள் இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழா மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும். முருகன் தனது இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வே கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஆறாம் நாள் சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும்.

இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. இதற்காக ஆறு நாட்களும் கோயிலில் தங்கி விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதே போல் விரதம் வீட்டில் இருக்கும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபடவும் செய்கிறார்கள். இதனால் இந்த ஆறு நாட்கள் திருச்செந்தூர் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று (அக்டோபர் 22) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு தீபாரதனை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

Also Read:  கந்த சஷ்டி திருவிழா..விரதம் இருப்பவர்கள் வழிபடும் முறை!

9 மணிக்கு மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாரதனையும் காட்டப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாரதனை நடக்கிறது. இதன் பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் சமேதராக தங்கச் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்படும்.

பின்னர் மாலை 3:30 மணிக்கு மூலவருக்கு சாயரட்ச்சை தீபாரதனை நடைபெறும். இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் தங்க ரதத்தில் கிரி வல வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

இந்த கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் 28ஆம் தேதி இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் கோயிலில் தங்கி வழிபடுவார்கள் என்பதால் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: கந்த சஷ்டி கவசம்.. இந்த 6 வரி போதும்.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருவிழா காலங்களில் 700 போலீசாரும், சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் 4600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடற்கரை பகுதியில் இருந்து பொதுமக்களை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.  இது மட்டுமல்லாமல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கடலில் புனித நீராடும் போது ஆழமான பகுதிக்கு சென்று விடாத வகையில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.