Getty Images
யுக்ரேன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக புதிய தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ரஷ்ய அரசின் 'போர் இயந்திரத்திற்கு' நிதியளிக்க உதவும் இரண்டு முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயிலை (Lukoil) குறிவைப்பதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முதல் நேரடி நடவடிக்கைகளை இவை. எனவே புவிசார் அரசியல் ரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகக் கருதப்படுகிறது.
சீனாவும் இந்தியாவும் சேர்ந்து, ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதியில் பெரும் பங்களிக்கின்றன. எனவே இந்த புதிய தடைகள் இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுகிறது.
அமெரிக்கத் தடைகளால் எந்த நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன?அமெரிக்க கருவூலத் துறையின் 'வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம்' (OFAC) விதித்த தடைகள், ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களை 'ப்ளாக்லிஸ்ட்' (Blacklist) பட்டியலில் சேர்த்துள்ளன.
ப்ளூம்பெர்க் மதிப்பீடுகளின்படி, 'ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பரான இகோர் செச்சின் தலைமையில் இயங்கும் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான ரோஸ்நெஃப்ட் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனமான லுகோயில் ஆகியவை நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன'.
இரண்டு நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.
பிரிட்டன் அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மட்டுமே மொத்த ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கு பொறுப்பாகும். உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 6 சதவீதம் ஆகும்.
அமெரிக்கா இப்போது ஏன் தடைகளை விதிக்கிறது?
Getty Images புதிய தடைகள் வளரும் நாடுகளில் எண்ணெய் விநியோகத்தையும் விலையையும் பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
சமீப காலமாக, ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு டிரம்ப் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார். காஸாவில் போர்நிறுத்தத்தை கொண்டுவர உதவியது, அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
யுக்ரேனில் நிலைமையை விரைவாக தீர்ப்பதாக டிரம்ப் வாக்குறுதிகள் அளித்துள்ள போதிலும், அங்கு ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை இதுவரை எட்டமுடியவில்லை. ஆகஸ்ட் மாதம் புதினுடன் நடந்த உச்சிமாநாட்டில் எந்த உறுதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை, மேலும் ரஷ்யா மீதான டிரம்பின் விரக்தி தொடர்ந்து அதிகரித்தது.
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய எரிசக்தித் துறையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை தயக்கம் காட்டி வந்தன.
இதற்கிடையில், அமெரிக்க நட்பு நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார், அதற்கு இணங்கினால் மட்டுமே ரஷ்யா மீது தடைகள் விதிப்பதாகக் கூறினார்.
"அர்த்தமற்ற போரை" முடிவுக்குக் கொண்டுவர புதின் மறுத்ததே இறுதியில் இந்த 'புதிய தடைகள்' நடவடிக்கையைத் தூண்டியது என்று பெசென்ட் புதன்கிழமை (அக்டோபர் 22) அன்று கூறினார்.
ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது பிரிட்டன் இதேபோன்ற தடைகளை விதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு மற்றும் புடாபெஸ்டில் புதினுடனான திட்டமிடப்பட்ட தொடர் சந்திப்பு ஒத்திவைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை கூறியதற்கு ஒரு நாள் கழித்து, 'புதிய அமெரிக்கத் தடைகள்' குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"நான் புதினுடன் பேசும் ஒவ்வொரு முறையும், அந்த உரையாடல்கள் நல்ல முறையில் நடைபெறும். பின்னர் எந்த முன்னேற்றமும் இருக்காது. நாங்கள் நீண்ட காலம் பொறுமையாக இருந்துவிட்டோம், எனவே முடிவெடுக்க நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தேன்" என டிரம்ப் விளக்கினார்.
புதிய அமெரிக்கத் தடைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?டிரம்ப் இதுவரை ஒரு சமாதான ஒப்பந்தத்தை கொண்டுவருவதில் நம்பிக்கை வைத்திருந்தார். அதேபோல ரஷ்யா மீது தடைகளை விதிப்பதையும் எதிர்த்து வந்தார். எனவே இந்தத் தடைகளின் தாக்கம் குறியீட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
யுக்ரேனுக்கான இரண்டு முன்னாள் அமெரிக்க தூதர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் நீண்ட கால தாக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
"இந்தத் தடைகள் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் ரஷ்யப் பொருளாதாரத்தை நிச்சயமாகப் பாதிக்கும்" என்று முன்னாள் தூதர் ஜான் ஹெர்ப்ஸ்ட் பிபிசியிடம் கூறினார். "ஆனால் இந்த நடவடிக்கை மட்டுமே, புதினை அமைதி மற்றும் இணக்கமான முடிவை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்."
"புதின் உண்மையிலேயே நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாம் விரும்பினால், பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான பெரும் அழுத்தத்தை பல மாதங்களுக்கு நாம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இருப்பினும் இது ஒரு நல்ல தொடக்கமாகும்."
மற்றொரு முன்னாள் தூதரான பில் டெய்லர் பிபிசியிடம் பேசுகையில், "இந்தத் தடைகள் 'பேச்சுவார்த்தைக்கு தான் நிச்சயம் வர வேண்டும்' என்பதை அதிபர் புதினுக்கு உணர்த்தும்" என்கிறார்.
அமெரிக்கத் தடைகள் யுக்ரேன் போரை எவ்வாறு பாதிக்கலாம்?யுக்ரேன் போரைப் பொறுத்தவரை, டிரம்பின் கூற்றுப்படி, நிலம் 'இருப்பது போலவே பிரிக்கப்பட வேண்டும்', மேலும் தற்போதைய போர்முனைப் பகுதிகளில் சண்டையை நிறுத்துவதற்கான திட்டங்களை அவர் பலமுறை ஆதரித்துள்ளார்.
ஆனால் டிரம்பின் யோசனைக்கு எதிராக ரஷ்யா உள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், 'யுக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு டான்பாஸ் பகுதியின் சில பகுதிகளை விட்டு யுக்ரேனிய துருப்புகள் வெளியேற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ரஷ்யா இன்னும் மாற்றவில்லை' என்பதைக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தூணான 'ரஷ்ய எண்ணெய்' மீது விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தடைகள், அந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யத் வழிவகுக்கக்கூடும்.
அமெரிக்கா அதைத்தான் எதிர்பார்க்கிறது என்றாலும், களத்தில் உடனடி மாற்றம் எதுவும் இருக்காது என்று பிபிசியிடம் பேசிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிட்னி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்டூவர்ட் ரோலோவின் கூற்றுப்படி, இந்தத் தடைகள் இரண்டு முதன்மை இலக்குகளுக்கு உதவுகின்றன.
"போரை நடத்துவதற்கான ரஷ்யாவின் தொழில்துறை திறனில் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவது, மற்றும் ரஷ்யாவின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில், புதிய தடைகளால் அதிகரிக்கும் விளைவுகள் குறித்த அச்சுறுத்தல் மூலம், அமைதிக்கு உடன்படுமாறு ரஷ்யாவை கட்டாயப்படுத்துவது".
"அவை முதல் இலக்கை பாதிக்காது. பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகளுக்கும், மோதலைத் தொடர்வதால் ஏற்படும் என்று கூறப்படும் விளைவுகளுக்கும் இடையில் ஒரு கவனமான ராஜீய சமநிலை ஏற்படுத்தப்பட்டால், அவை பிந்தையவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்." என்கிறார் டாக்டர் ரோலோ.
சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 'ராணுவ உருமாற்றத் திட்டங்களின்' உதவிப் பேராசிரியர் மைக்கேல் ரஸ்கா, "குறுகிய காலத்தில், தடைகள் மூலம் யுக்ரேனில் ராணுவ சமநிலையை மாற்ற வாய்ப்பில்லை" என்று கூறினார்.
ஆனால், "லாப வரம்புகள் குறையும் போது, சமூகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் நீண்ட போருக்கு நிதியளிப்பதற்கும் இடையில் ரஷ்யா கடுமையான தேர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும்." என்று அவர் கூறுகிறார்.
வேறு எந்த நாடுகள் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படக்கூடும்?இந்த தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கும் என்பது உறுதி, ஏனெனில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களிலிருந்து வரும் வரிகள் அந்நாட்டின் ஃபெடரல் பட்ஜெட்டில் கால் பங்கைக் கொண்டுள்ளன.
ஆனால் அவற்றின் தாக்கம் வேறு நாடுகளிலும் உணரப்படலாம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி துறையாகும். உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா உள்பட துருக்கி போன்றவை ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
சீனாவும் இந்தியாவும் சேர்ந்து, ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதியில் பெரும் பங்களிக்கின்றன.
சீனா கடந்த ஆண்டு 100 மில்லியன் டன்களுக்கும் அதிகமான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியது, இது அதன் மொத்த எரிசக்தி இறக்குமதியில் கிட்டத்தட்ட 20% ஆகும்.
அதேபோல், யுக்ரேன் போருக்கு முன்பு, சிறிய அளவிலான ரஷ்ய எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, 2022 முதல் சுமார் $140 பில்லியன் மதிப்பிலான இறக்குமதி என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.
கடந்த காலத்தில், டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்தார், இது இறக்குமதிகளுக்கு பதிலடி நடவடிக்கை என்று கூறினார்.
செவ்வாயன்று ஒரு தொலைபேசி அழைப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி "இந்தியா, ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை" என்று தனக்கு உறுதியளித்ததாகக் கூறிய டிரம்ப், "ரஷ்யா- யுக்ரேன் போர் முடிவுக்கு வருவதைக் மோதியும் காண விரும்புகிறார்" என்றார்.
Getty Images நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் டிரம்ப்
இந்த நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துகிறார். இதனால் அவர்கள் மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஒருவேளை அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும்கூட.
ஆனால் அவ்வாறு செய்ய மறுப்பது சீனாவையும் இந்தியாவையும், அமெரிக்காவிடமிருந்து இரண்டாம் நிலைத் தடைகளுக்கு உள்ளாக்கக்கூடும்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் மூத்த (பொருளாதாரத் தடைகள்) அதிகாரி எட்வர்ட் ஃபிஷ்மேன், புதிய தடைகளின் முக்கியத்துவம் அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது என்று கூறுகிறார்.
"ரோஸ்நெஃப்ட், லுகோயிலுடன் பரிவர்த்தனை செய்யும் சீன வங்கிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தகர்கள் மற்றும் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இரண்டாம் நிலை தடைகளைக் கொண்டு அமெரிக்கா தீவிரமாக அச்சுறுத்துமா?" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"குறுகிய காலத்தில், ரஷ்ய எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் இருந்து குறைந்தபட்சம் சில பின்னடைவுகளை நான் எதிர்பார்க்கிறேன்." என்கிறார் அவர்.
ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயிலில் இருந்து நேரடியாக எந்த விநியோகமும் வராமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் ரஷ்ய எண்ணெய் வர்த்தக ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக, நிலைமையை நேரடியாக அறிந்த ஒரு வட்டாரம் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் எண்ணெயை அதிகம் வாங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அதன் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறியது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையை எவ்வாறு பாதிக்கும்?டிரம்பின் பொருளாதாரத் தடைகள் பற்றிய செய்திகள் ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளன, சர்வதேச அளவில் முன்னணி கச்சா எண்ணெய் அளவுகோலான பிரென்ட் (Brent) 5% உயர்வை எட்டியுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது பிரிட்டன் தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்து பிரென்ட் 1.6% உயர்வை எட்டியது.
அந்த அறிக்கைக்குப் பிறகு, 'குறிப்பிட்ட ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை குறிவைப்பது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்து, பிரிட்டன் நிறுவனங்கள் உட்பட உலகளவில் பல வணிகங்களின் செலவுகளை அதிகரிக்கும்' என்று லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தும் கணிப்புகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறைவேறியதாகத் தெரியவில்லை, மேலும் டிரம்பின் அறிக்கை நிச்சயமற்ற தன்மையை அதிகரிப்பதால் கடந்த நாளில் காணப்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமில்லை.
ஆனால், இந்த சமீபத்திய நிகழ்விலும் கூட, கச்சா எண்ணெய் விலைகளின் இந்த எழுச்சி தொடர வாய்ப்பில்லை என்று டாக்டர் ரோலோ கூறுகிறார்.
"இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதி மீதான இரண்டாம் நிலை தடைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படாவிட்டால், இது நீண்ட காலத்திற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு