இந்திய 'ஏ' அணியில் சர்பராஸ்கான் இடம்பெறாதது ஏன்? - கேள்விகளும், முன்னாள் வீரர்களின் பதிலும்
BBC Tamil October 24, 2025 07:48 PM
Getty Images 2024 அக்டோபர் 19 அன்று பெங்களூருவில் நடந்த இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் அற்புதமான சதம் அடித்தார்.

"நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் 'மறைமுக தகவல் பரிமாற்றத்தில்' இயங்குகிறது. இது மாற வேண்டும் என விரும்புகிறேன்" என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மிகச் சமீபத்திய மற்றும் தெளிவான உதாரணம் 28 வயதான சர்ஃபராஸ் கான். சர்ஃபராஸ் கான் இந்திய 'ஏ' அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து அஸ்வின் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். சர்ஃபராஸ் கான் தனது திறமையை நிரூபிக்க இருந்த வாய்ப்பை நிர்வாகம் தடுத்துவிட்டதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டுப் போட்டிகளில் மிகவும் நிலையான ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவரான சர்ஃபராஸ் கான், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடவிருக்கும் இந்தியா ஏ அணியில் இடம் பெறவில்லை.

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணியில் மட்டுமல்ல, அதற்கு முன்னதாக காயத்திலிருந்து மீண்ட பிறகும், சர்ஃபராஸ் கான் துலீப் டிராபி மற்றும் இரானி டிராபிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியா ஏ அணியில் சர்ஃபராஸ் கானைச் சேர்த்திருந்தால் அது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்கும். அது, அணிக்கு மட்டுமல்ல, அவரும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக தனது நிலையை வலுப்படுத்த உதவியிருந்திருக்கும்.

2025–26 சீசனின் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான முதல் ரஞ்சி டிராபி போட்டியில், சர்பராஸ் சிறப்பாக விளையாடி, முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 32 ரன்களும் எடுத்தார்.

இருப்பினும், அவரால் இந்தத் தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை.

Getty Images 2025–26 சீசனின் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான முதல் ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்பராஸ்

2025 மே மாதத்தில், இங்கிலாந்தின் கடினமான சூழ்நிலையில் விளையாடியபோது, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அற்புதமாக பேட்டிங் செய்த சர்பராஸ் கான் 92 ரன்கள் எடுத்தார்.

முதல் தர கிரிக்கெட்டில், சர்ஃப்ராஸ் 56 போட்டிகளில் விளையாடி 16 சதங்களையும் 15 அரை சதங்களையும் அடித்து 65.19 சராசரியை பெற்றுள்ளார், இது மிகவும் நல்ல செயல்திறன் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திறமை, பொறுமை மற்றும் சாமர்த்தியமாக ரன்கள் குவிக்கும் தன்மையால், சர்பராஸ் கான் கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக இருந்து வருகிறார்.

வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டின் நாலாப்புறமும் சுற்றி ரன்கள் எடுக்க தனது கால் மற்றும் க்ரீஸை சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறனை அவர் தொடர்ந்து நிரூபித்துள்ளார்.

சர்ஃப்ராஸின் பேட்டிங் பொதுவாக கேள்விக்குள்ளாவதில்லை என்றாலும், அவரது உடற்தகுதியே அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

தனது இந்தப் பிரச்னையைத் தீர்க்க சர்ஃப்ராஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு, உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் கடும் உடற்பயிற்சிகள் மூலம் 17 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Getty Images சர்ஃப்ராஸ் தேர்ந்தெடுக்கப்படாதற்கான காரணம்

சர்ஃப்ராஸ் இந்திய ஏ அணியில் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து பேசும் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பிரவீன் ஆம்ரே, "கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது செயல்திறனின் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்தியா ஏ அணியில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்று சொல்கிறார்.

முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும் தேர்வாளருமான சபா கரீம் கூறுகையில், "சர்ஃபராஸ் இந்தியா ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. அவருக்கு உடற்தகுதி இல்லை என்று சொன்னார்கள், ஆனால் மும்பை அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான கடைசி ரஞ்சி போட்டியில் விளையாடினார், இது அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது" என்கிறார்.

"தேர்வாளர்கள், எந்த அடிப்படையில் சர்ஃபராஸை அணியில் இருந்து நீக்க முடிவு செய்தார்கள் என எனக்குத் தெரியாது. அதற்கு உண்மையில் அவர்களிடம் ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் அல்லது ஒருவேளை அவர்கள் மீண்டும் அவரை அணியில் சேர்க்கலாம்."

2024 அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், டிம் சவுதி மற்றும் மேட் ஹென்றி போன்ற பந்து வீச்சாளர்களின் பந்தை எதிர்கொண்ட சர்ஃபராஸ் 150 ரன்கள் எடுத்தார்.

இந்த இன்னிங்ஸ் இந்திய மிடில் ஆர்டரை வலுவாக நிலைநிறுத்தும் அவரது திறனைக் காட்டியது. அப்படிப்பட்ட நிலையில், 2024-25ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

தேர்வாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே தொடர்பு இல்லாமை

"நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த பிறகு, தேர்வாளர்கள் மீது அதிக அழுத்தம் இருந்தது. ஆஸ்திரேலிய தொடரில் வேறு சில வீரர்களை முயற்சிக்க அவர்கள் விரும்பினர் என்று உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி தொடரில் செயல்பட்டதைப் போன்று நியூசிலாந்துக்கு எதிராக சர்பராஸ் சிறப்பாக செயல்படவில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம்," என்று சபா கரீம் கூறுகிறார்.

இந்திய கிரிக்கெட்டில் வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடர்ந்து ஒரே மாதிரி இல்லாதது மற்றும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்த கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.

சர்பராஸ் இந்திய ஏ அணியில் சேர்க்கப்படாதது மட்டுமல்ல, சமீபத்தில், வேறு சில வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கடந்த கோடையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை, இருப்பினும் அவர் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் தற்போதைய இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Getty Images அக்டோபர் 1, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பயிற்சி அமர்வின் போது கவுதம் கம்பீரும் அஜித் அகர்கரும் பேசிக் கொள்கிறார்கள்

அதேபோல் முகமது ஷமி தற்போது அணியில் இல்லை. தனது உடற்தகுதி அறிக்கையை தேர்வாளர்களுக்கு வழங்குவது தனது வேலை அல்ல என்று ஷமி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து, தேர்வாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லாதது குறித்த விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

"சர்ஃபராஸ், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படும்போது அல்லது அவர்களை ஓய்வுக்கு அனுப்பும்போது, அது பற்றி அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நியாயம் மற்றும் நல்ல தகவல் தொடர்பு கலாசாரம் இருக்க வேண்டும். இது வீரர்களுக்கு உதவுவதுடன், எதிர்கால தேர்வாளர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் அமையும்" என பிரவீன் ஆம்ரே கூறுகிறார்.

"ஆனால் சர்பராஸுக்கு கதவுகள் மூடப்படவில்லை என நம்புகிறேன். அவர் சோர்வடைந்துவிடக்கூடாது, ரஞ்சியில் தொடர்ந்து ரன்கள் எடுக்க வேண்டும். விரைவில் அவர் இந்திய அணிக்குத் திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பிரவீன் ஆம்ரே தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.