தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சியின் கடைசி நேரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற பெயரில் நாடகமாடுவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்த தமிழக–கர்நாடக எல்லைப்பகுதியில், சாலைகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி போன்ற கிராமங்களுக்கு, மக்கள் வனப்பகுதியில் உள்ள கர்கேகண்டி நீரோடை வழியாக 20 கிலோ மீட்டர் பயணித்தே செல்வதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக உயர்மட்டப் பாலம் அமைக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்தும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைகள், பாலங்களுக்கு ரூ.78,000 கோடி செலவிட்டதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “அந்த நிதி எங்கே சென்றது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“மத்திய அரசு வழங்கும் கிராம சாலை நிதி எங்கே செல்கிறது? மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கே வீணடிக்கிறார்கள். அடிப்படை சாலை வசதிகளைக் கூட வழங்காதது வெட்கக்கேடு. ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் அவதிப்படுவது முதல்வருக்கு தெரியாதா?” என அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தமிழக அரசு தொடங்கி வைத்துள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம், மக்களின் வீடுகளுக்கே அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த திட்டத்தின் மூலம் ஊரகங்களில் 15 துறைகளின் 46 சேவைகள், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை, குடிநீர் இணைப்பு, பிறப்பு–இறப்பு சான்றிதழ், வருமானம், இருப்பிடச் சான்றிதழ், மின் பெயர் மாற்றம் போன்ற பல சேவைகளையும் மக்கள் இந்த முகாமில் பெற முடியும்.
அரசு தரப்பில் திட்டம் மக்களுக்கு நெருக்கமாகச் செல்வதாக விளக்கமளிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் இது தேர்தல் அரசியலுக்கான முயற்சி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.