BB Tamil 9 Day 18: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு' - நடித்த பாரு; ரீல்ஸ் அலப்பறையில் திவாகர்
Vikatan October 24, 2025 07:48 PM

ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க் முடிவதற்குள் நம்மைப் பிழிந்தெடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஒரே சத்தம், சண்டை. இத்தனை களேபரம் எதற்கு? ஏதோ கலர் கலராக தண்ணீரை பாட்டிலில் ஊற்றி பிறகு கீழே ஊற்றி விளையாடுவதற்கு.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..

“சுபிக்ஷாவிற்கு பாயின்ட் கொடுக்காத. அவளுக்கு குறைச்சுப் போடு” என்று நாள் முழுவதும் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. ஆனால் இறுதியில் சுபிக்ஷாதான் வென்றார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 18

முந்தைய எபிசோடின் சத்தம் இன்னமும்கூட காதில் `ஙொய்ங்' என்று ஒலித்துக்கொண்டிருக்க, அதற்கு recap எல்லாம் போட்டு வெறுப்பேற்றினார்கள். “இல்லடா பாரு.. இவங்க நல்லாத்தான் பண்ணியிருக்காங்கடா.. அப்ரூவ் பண்ணிடலாம்டா” என்று திவாகர் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டிருக்க, “யோவ் வென்று.. சுபிக்ஷாவை ஓரங்கட்டு.. ரம்யாவிற்கு மார்க் போடு” என்று அதட்டிக் கொண்டிருந்தார் பாரு.

BB Tamil 9 Day 18

‘மொட்டை மாடி கல்பனாவா, அந்த வீடு அவங்கள்தே இல்லையாமே?’ என்கிற வசனம் போல, “ஏம்மா பாரு.. நீதான் QC வேலையை ரிசைன் பண்ணிட்டியே.. அப்புறம் இங்க என்ன பண்ற?” என்று கனி கேட்க “அதானே.. ?” என்று மற்றவர்களும் பின் பாட்டு பாடினார்கள். அப்போதும் தன் கெத்தைவிடாமல் “அண்ணே.. திவாகர் அண்ணே.. யோவ்.. வென்று.. நான் சொல்ற மாதிரி செய்” என்று வாட்டர் மெலனை ஜூஸ் போட்டுக் கொண்டிருந்தார் பாரு.

ரம்யாவும் சுபிக்ஷாவும் தாங்கள் பெற்ற 9 காயின்களை தாங்களே வைத்துக்கொண்டு பேராசை முதலாளிகளாக மாற, சபரி மட்டும் பெருந்தன்மையுடன் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுத்தார். அதிகாரம் இல்லையென்றால் தனக்கு முட்டை தொக்கு கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட பாரு “பிக் பாஸ்.. நான் மறுபடியும் வேலைக்கு சேர்ந்துட்டேன்” என்று காமிரா முன்பு சொன்ன கணத்தில் அந்தக் காமிராவே கன்னாபின்னாவென்று திட்டியிருக்கும். நள்ளிரவு நேரத்தில் ரம்யாவுடன் டீலிங் பேசிக் கொண்டிருந்தார் பாரு.

சண்டைச் சேவலாக திரியும் கம்ருதீன்

நாள் 19. ‘நாதஸ் திருந்திட்டான். யாரு சொன்னா.. அவனேதான்’ என்கிற கதையாக “இனி மேல் நான் சாந்தம் பாரு.. கோபப்படாம அமைதியா ஹாண்டில் பண்ணப்போறேன்” என்று காலையிலேயே நல்ல வார்த்தை பேசிக் கொண்டிருந்தார் கம்ருதீன். ஆனால் தன் மீது அவருக்கே நம்பிக்கையில்லை. “ஆனா அது கஷ்டம்தான்.. இந்த வாய் இருக்கே” என்று தன் மீதே நொந்துகொண்டு போனார்.

இந்த சீசனின் சண்டைச் சேவல் யார் என்றால் அது கம்ருதீன்தான். எதிரே வருகிற எல்லோரிடமும் ஒரண்டை இழுக்கிறார். (பாரு தவிர!) காலையிலேயே இவருக்கும் துஷாருக்கும் இடையில் சண்டை. “வேலை சரியா செய்யல” என்கிற புகாருடன் துஷார் வர “டேய் போடா நைன்த் ஸ்டாண்டர்ட் பையா.. என் கிட்டலாம் வெச்சுக்காத” என்று அவரைத் துரத்தி அனுப்பினார் கம்மு. இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்படும் நிலைமை. இது வேலை தொடர்பான பிரச்னையா, அல்லது அரோகரா பிரச்னையா என்று தெரியவில்லை.

‘பதவி போயும் இவன் இன்னமும் தன்னை தலயாவே நினைச்சிட்டு இருக்கான்போல. நீங்க சொன்னா கேட்டுக்கறேன் கனியக்கா' என்று இறங்கி வந்தார் கம்ருதீன்.

BB Tamil 9 Day 18

QC அதிகாரி என்கிற போதையில் திவாகரின் ராஜ வாழ்க்கை

பாட்டில்கள் வந்தன. வழக்கம்போல் முதலில் பாய்ந்து வயிறு நிறைய வாரிக் கொண்டு வந்தார் பிரவீன். லாரியின் அடியில் விக்ரம், வியன்னாவெல்லாம் நசுங்கிக் கொண்டிருந்தார்கள். ஆளாளுக்கு மூலைக்கு மூலை நின்று டீல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

காமிரா முன்பாக வந்த வினோத் “இந்த தர்பூசணி இருக்கான்ல.. ரொம்ப பண்றான்.. என் மேல இருக்கற காண்டையெல்லாம் டாஸ்க்ல காட்றான். எல்லா பாட்டிலையும் ரிஜக்ட் பண்ணிடறான்.. இப்படியே போனா அந்த தர்பூசணியை ஜூஸ் போட்டு குடிக்காம விட மாட்டேன்” என்று வீர சபதம் ஏற்றுக்கொண்டார்.

“சுபிக்ஷாவிற்கு மார்க் போடாத. குறை” என்று தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்தார் பாரு. இந்த டாஸ்க்கில் அதிக பட்ச சொகுசை அடைந்தவர் யார் என்றால் அது திவாகர்தான்.

BB Tamil 9 Day 18

ஒருவர் மாதுளம் பழம் ஊட்ட, இன்னொரு பக்கத்தில் சபரி ஓடி வந்து தர்பூசணி ஊட்டி விட ராஜவாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்தார். இதில் தர்பூசணியை கடித்துக் கொண்டே ‘சுபிக்ஷா.. வியன்னா.. அரோரா.. ல்லாம் வாங்க.. ரீல்ஸ் போடலாம்” என்று அலப்பறை தந்தார். தர்பூசணியை கடிப்பது போல் பாவனை செய்து நடிப்பு அரக்கனுக்கே டஃப் பைஃட் தந்தார் வியன்னா. (ஏண்டா இந்தக் காட்சியில் நடித்தோம் என்று நடிகர் சூர்யா நொந்து போயிருப்பார்.).

பியர் கம்பெனி ஓனர் போல பெண்களுடன் ரீல்ஸ் போட்டு மகிழ்ந்த திவாகர், அடுத்ததாக பாருவை தேடிச் சென்று ‘தங்கப் பிள்ள.. குட்டி பிள்ளை.. வா நாமளும் ஒரு ரீல்ஸ் போடுவோம்’ என்று அழைக்க “டேய்.. ஏற்கெனவே நான் கொலை காண்டுல இருக்கேன். ஒழுங்கா ஓடிடு” என்கிற மாதிரி அவரை துரத்தி விட்டார் பாரு.

வாட்டர்மெலன் ஸ்டாரை , லெமன் ஜூஸ் போட்ட பாரு

சாப்பாடு மேஜையில்கூட திவாகரை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் பாரு. “யோவ்.. நேத்துதானே.. என் சாப்பாட்டை திருடி சாப்பிட்டே.. இன்னிக்குமா.. உனக்கு வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லையா?” என்று வசை பாட ‘த்தோ.. பார்.. உனக்கு அவ்வளவுதான் லிமிட்டு. நானும் பேச ஆரம்பிச்சா.. மரியாதை கெட்டுடும்..’ என்று கட்டக் கடேசியில் திவாகருக்கும் ஒருவழியாக கோபம் வந்துவிட்டது. இதை எதிர்பார்க்காத பாரு, ஒரு மாதிரி திகிலான எக்ஸ்பிரஷனுடன் விலகிப் போனார்.

“பாரு.. மைக் பாட்டரி மாத்துங்க" என்று எச்சரிக்கை தந்தார் பிக் பாஸ். அந்த அளவிற்கு பேசி பாட்டரியையே காலியாக்கியிரு்ககிறார் பாரு. “நான் ஏற்கெனவே சொன்னேன் கேட்டியா?” என்று ‘தல’ கனி தலையிட இருவருக்கும் சண்டை. “பாருவாவும் வேலை செய்யறதில்ல.. QC ஆபிசராவும் வேலை செய்யறதில்ல.. சரியான வெட்டி ஆஃபிசர்" என்று கனியக்கா சொன்னது நெற்றியடி.

பாருவிற்கு ஆதரவாக கம்ருதீன் ஓடி வர “கூஜா தூக்க வராத” என்று FJ கத்த இன்னொரு சண்டை ஆரம்பம். இது அப்படியே பரவி திவாகருக்கும் கம்ருதீனுக்கும் சண்டையானது. ‘டேய்..காமெடி.. நீயெல்லாம் ஒரு ஆளா..” என்று கம்மு கத்த “போடா.. நீயெல்லாம் ஒரு ஹீரேவா..வில்லன்டா” என்று பதிலுக்கு திவாகரும் டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

BB Tamil 9 Day 18

திவாகரிடம் பம்மி நடித்த பாரு - கழுத்தைப் பிடி அல்லது காலைப் பிடி

QC நேரம். ‘சப்ஜெக்டிடம் அசைவு வந்துவிட்டது. இனி மேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்பதை உணர்ந்த பாரு, “திவாகர் சார்.. நமக்குள்ள ஏதாச்சும் பிரச்னை இருக்கா.. உங்க கால்ல கூட விழறேன். மன்னிச்சுக்கிங்க.. உங்களுக்கு நான்.. எனக்கு நீங்க ஆதரவா இருக்கணும்” என்று பாவனையாக கண்ணீர்விட்டார். `ஒண்ணு.. கழுத்தைப் பிடி அல்லது காலைப் பிடி’ என்கிற பழமொழிக்கு உதாரணம் பாரு.

‘நீ என்னை ரொம்ப சீப்பா பேசற' என்று சலித்துக்கொண்ட திவாகர், ‘கால்லலாம் விழாத’ என்று பதறினார். “இவனுகளையெல்லாம் இப்படித்தான் ஹாண்டில் பண்ணணும். இப்ப பகைச்சுக்கக்கூடாது” என்று பிறகு கம்ருதீனிடம் நக்கலாக சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. திவாகரிடம் அந்தப் பதவி மட்டும் இல்லையென்றால், பாரு அவரையே ஜூஸ் போட்டிருப்பார்.

BB Tamil 9 Day 18

பாரு திட்டியதையெல்லாம் அடுத்த நொடியே துடைத்துப்போட்டு விட்டு சுபிக்ஷா, ரம்யா என்று எல்லோரிடமும் QC அதிகாரி என்கிற போதையில் வழிந்து கொண்டிருந்தார் திவாகர். அந்த அளவிற்கு ‘பொம்பளை ஷோக்கு கேக்குதா கோபி.. பொம்பளை ஷோக்கு’ மோடில் இருக்கிறார் திவாகர்.

QC ஏரியாவில் பாரு வழக்கம்போல் பயங்கரமாக அலப்பறை செய்துகொண்டிருக்க மக்கள் கொதித்துப்போனார்கள். ‘நல்லா இருக்கிற பாட்டிலை கூட ரிஜக்ட் பண்ணி பழிவாங்கறாங்க’ என்று ஒரே கூப்பாடு. சந்தடி சாக்கில் ரிஜக்ட் ஆன பாட்டிலை உருவிக்கொண்டு வந்தார் துஷார். இதையே மறுபடி கொண்டு வந்து QC டீம் அப்ரூவ் செய்திருந்தால் நல்ல காமெடியாக இருந்திருக்கும்.

அதிக காயின்களை வைத்து குற்றவுணர்வில் தவிக்கிறாரா சுபிக்ஷா?

ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்து தொலைத்தது. முதலாளிகள் தொழிலாளிகளுக்கு பங்குபிரிக்க வேண்டிய நேரம். “நான் யாரு காலையும் கையையும் பிடிச்சு ஆடலை. நேர்மையாக விளையாண்டேன்” என்று எஃப்ஜே சொல்ல நக்கலாகச் சிரித்தார் பாரு. “நாம 60:40 டீல் பேசினோம்.. அதன்படி நீ நடக்கலையே?” என்று சுபிக்ஷாவை கனி மடக்க, குற்றவுணர்வில் தலைகுனிந்து கொண்டார் சுபிக்ஷா. மற்ற முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நியாயமாகப் பங்கு பிரிக்க, சுபிக்ஷா மட்டும் பெரும்பான்மையான காயின்களை தன்னிடமே வைத்துக்கொண்ட குற்றவுணர்வு போல. சூப்பர் டீலக்ஸ் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஐடியாவில் சுபிக்ஷா இருக்கிறார்போல.

BB Tamil 9 Day 18

டாஸ்க்கின் முடிவாக, பிக் பாஸ் வீட்டில் அதிகபட்ச காயின்களை சம்பாதித்திருந்த பிரவீன்ராஜிற்கு அடுத்த வார எவிக்ஷனில் இருந்து விடுதலை கிடைக்கும். சூப்பர் வீட்டிற்கும் அவர் இடம் மாறுவார். 37 காயின்களை பதுக்கி வைத்திருந்த சுபிக்ஷாவிற்கும் எவிக்ஷன் விடுதலை. கூடுதலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை அவரால் காப்பாற்ற முடியும். (ஒருவேளை கனியை தேர்ந்தெடுக்கலாம்!)

மறுபடியும் மறுபடியும் பிக் பாஸ் மூன்றாவது சீசனை நினைவு கூர வேண்டியிருக்கிறது. சாண்டி, கவின் கூட்டணியில் நினைத்து நினைத்து சிரிக்கும் அளவிற்கு எத்தனை சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த சீசனில் இதுவரை அப்படி ஒரு துளி கூட நிகழவில்லை!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.