கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பேடராயனபுரா பகுதியைச் சேர்ந்த கிரண், தனது உறவினரான அனுஷாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், கடந்த 4ம் தேதி இரவு அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தனது ஸ்கூட்டரைப் பயன்படுத்தினார். அவருடன் கிரணின் மனைவி அனிதாவும் சென்றிருந்தார்.

மூவரும் ஒரே ஸ்கூட்டரில் அவசரமாக பயணித்தனர்.அப்போது, பேடராயனபுரா எம்.எம். ரோடு பகுதியில், எதிர்பாராதவிதமாக ஒரு கார், அதிவேகமாக வந்து ஸ்கூட்டரை மோதியதும், நிற்காமல் தப்பி சென்றது. அதிர்ச்சி மோதலில் கிரண், அனுஷா, அனிதா ஆகிய மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
குறிப்பாக அனிதாவின் காலில் கடுமையான முறிவு ஏற்பட்டது. உடனடியாக மூவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அனிதா கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார்.இதையடுத்து, அனிதா போலீசில் புகார் அளித்தார். விசாரணை தொடங்கிய போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதிர்ச்சியடைந்தனர் .
விபத்தை ஏற்படுத்திய கார், சின்னத்திரை நடிகையும், கன்னட பிக்பாஸ் போட்டியாளருமான திவ்யா சுரேஷுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், விபத்து நடந்த இரவு காரை திவ்யா சுரேஷ் தானே ஓட்டி சென்றதாகவும், மோதிய பின் நிற்காமல் சென்றதாகவும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து போலீசார் திவ்யா சுரேஷை விசாரணைக்கு அழைத்து, வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். ஆனால், விசாரணைக்குப் பின் அந்த கார் திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அனிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வரை மருத்துவ செலவு செய்ததாகவும், அதற்கான நஷ்டஈட்டை நடிகை திவ்யா சுரேஷே வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.